நாடாளுமன்ற 5-வது கட்ட தேர்தல் நிறைவு: 57.47 சதவீத வாக்குப்பதிவு


விறுவிறு வாக்குப்பதிவு நிறைவு
x
தினத்தந்தி 20 May 2024 1:38 PM GMT (Updated: 20 May 2024 5:05 PM GMT)

6-ம் கட்ட வாக்குப்பதிவு வரும் 25-ம் தேதி நடைபெற உள்ளது.

புதுடெல்லி,

543 உறுப்பினர்களை கொண்ட இந்திய நாடாளுமன்ற மக்களவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடந்து வருகிறது. உலகமே எதிர்பார்க்கும் இந்த தேர்தலில் முதல் 4 கட்ட வாக்குப்பதிவு முடிந்துவிட்டது. இதன் மூலம் 379 தொகுதிகளுக்கு தேர்தல் நிறைவடைந்து உள்ளது. இதில் பா.ஜனதா வேட்பாளர் போட்டியின்றி தேர்வான குஜராத்தின் சூரத் தொகுதியும் அடங்கும்.

இதுவரை நடந்த 4 கட்ட தேர்தல்களின் மூலம் 23 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நாடாளுமன்ற தேர்தல் நிறைவடைந்து விட்டது. இதில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா போன்ற தென் இந்திய மாநிலங்கள் முக்கியமானவை ஆகும். 4 கட்ட தேர்தல்கள் நிறைவடைந்துள்ள நிலையில் 5-வது கட்டமாக 49 தொகுதிகளில் இன்று விறுவிறுப்பாக நடைபெற்றது.

5-ம் கட்டமாக இன்று நடைபெற்ற தேர்தலில் உத்தரபிரதேசத்தில் 14, மராட்டியம் 13, மேற்கு வங்காளம் 7, பீகார், ஒடிசாவில் தலா 5, ஜார்க்கண்டில் 3. ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களில் தலா ஒரு தொகுதி அடங்கி உள்ளன.

இந்த தொகுதிகளில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. பல்வேறு தொகுதிகளிலும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்து வந்தனர்.

இன்றைய தேர்தலில், அரசியல் கட்சி தலைவர்கள், திரைபிரபலங்கள் என பலரும் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.இன்று மாலை 5 மணி நிலவரப்படி 56.68 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. இந்தநிலையில் 49 தொகுதிகளிலும் இன்று மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. இரவு 7 மணி நிலவரப்படி 57.47 சதவீதம் ஓட்டுகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக மேற்குவங்கத்தில் 73 % ஓட்டுகளும், குறைந்தபட்சமாக மராட்டியத்தில் 48.88% ஓட்டுகளும் பதிவாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பீகார் - 52.60%, மராட்டியம் - 48.88%, மேற்கு வங்காளம் - 73%, ஒடிசா - 60.72%, ஜார்க்கண்ட் - 63%, ஜம்மு கஷ்மீர் - 54.49%, உ.பி - 57.79% லடாக் - 67.15% வாக்குப்பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மக்களவைக்கான 6, 7-ஆம் கட்ட வாக்குப் பதிவுகள் மே 25, ஜூன் 1 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளன. ஜூன் 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.


Next Story