இன்று ஆடி மாத தேய்பிறை அஷ்டமி: துன்பங்கள் நீங்க பைரவரை வழிபடுங்கள்


பைரவர் வழிபாடு
x
தினத்தந்தி 28 July 2024 6:29 AM GMT (Updated: 28 July 2024 7:38 AM GMT)

வீட்டில் வழிபட முடியவில்லை என்றால் சிவன் கோவிலுக்கு ராகு கால நேரத்தில் சென்று, அங்கு நடக்கும் பைரவ வழிபாட்டில் கலந்துகொண்டு பைரவரை தரிசனம் செய்யலாம்.

அசுரர்களை வதம் செய்து, நல்லவர்களை காப்பதற்காக சிவ பெருமானின் நெற்றிக் கண்ணில் இருந்து தோன்றியவர் பைரவர். பைரவருடைய உடலின் அங்கங்களாக 12 ராசிகள் அமைந்துள்ளன. பைரவரின் சேவகர்களாக நவக்கிரகங்களும் இருப்பதால் தன்னை வணங்கக் கூடிய பக்தர்கள் எந்த ராசியைச் சேர்ந்தவராயினும் நவக்கோள்களில் எந்தக் கோளின் தாக்கத்தால் பாதிப்பு வந்தாலும் கெடுதல்கள் அனைத்தில் இருந்தும் விடுவிப்பார்.

பைரவரை வழிபட ஏழரைச்சனி, அஷ்டமச்சனி, கண்டச்சனி, ஜென்மச்சனி, அர்த்தாஷ்டமச்சனி போன்ற சனி தோஷங்கள் விலகி விடும். பைரவப்பெருமானை வழிபட ஒவ்வொரு மாத அஷ்டமியும் மிகச் சிறந்த நாளாகும். ஏனெனில் அன்றைய நாளில் அஷ்டலட்சுமிகளும் பைரவரை வழிபடுவதாக ஐதீகம். எனவே அன்று பைரவரை வணங்கிட மக்கள் அனைத்து வளங்களையும் பெற்று சிறப்புடன் வாழலாம்.

அவ்வகையில் இன்று ஆடி மாத தேய்பிறை அஷ்டமியான இன்று பைரவரை வழிபடுவது மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது. பைரவரை வழிபட ஏற்ற கிழமை ஞாயிற்றுக்கிழமை என்பது கூடுதல் சிறப்பு. இன்று மாலை 4.30 முதல் 6 மணி வரையிலான ராகு காலத்தில் பைரவரை வழிபடலாம்.

பைரவருக்கு செந்நிற மலர்கள் சாத்தி வழிபடலாம். ஆலயங்களில், பைரவருக்கு வடைமாலை சாற்றியும் வேண்டிக்கொள்வார்கள்.

ராகுகால வேளையில், வீட்டு பூஜையறையில், விளக்கேற்றி, பைரவ அஷ்டகம் சொல்லி பாராயணம் செய்யலாம். வீட்டில் பைரவர் படம் இருந்தால் அந்த படத்திற்கு மாலை சாற்றி, மாலை 4.30 மணிக்கு பைரவருக்கு உரிய அஷ்டோத்திரம் சொல்லி அவரை மலர்களால் அர்ச்சனை செய்து வழிபடலாம். பைரவர் படம் இல்லை என்றால் விளக்கையே பைரவராக பாவித்து வழிபடலாம். மந்திரங்கள் எதுவும் சொல்ல தெரியவில்லை என்றால் எளிமையாக, "ஓம் பைரவாய நமஹ" அல்லது "ஓம் பைரவாய போற்றி" என்ற மந்திரத்தை சொல்லி அர்ச்சனை செய்து வழிபடலாம். அவருக்கு நைவேத்தியமாக காரமான புளியோதரை, தோல் நீக்காத கருப்பு உளுந்தில் மிளகு போட்டு செய்யக் கூடிய வடை ஆகியவற்றை படைத்து வழிபடலாம். வெல்லம் கலந்து செய்யப்படும் சர்க்கரை பொங்கல், பாயசம் போன்றவற்றையும் நைவேத்தியமாக படைக்கலாம். இவற்றை செய்ய முடியவில்லையா..? வெற்றிலை பாக்கு பழம் வைத்து வழிபட்டால் போதுமானது.

வீட்டில் வழிபட முடியவில்லை என்றால் அருகில் உள்ள சிவன் கோவிலுக்கு ராகு கால நேரத்தில் சென்று, அங்கு நடக்கும் பைரவ வழிபாட்டில் கலந்துகொண்டு பைரவரை தரிசனம் செய்யலாம். அங்கு அபிஷேகம் மற்றும் பூஜைக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொடுத்து, பூஜையில் கலந்து கொள்ளலாம்.

பைரவரை இவ்வாறு வழிபட்டால் எப்படிப்பட்ட துன்பமாக இருந்தாலும் அதிலிருந்து பைரவர் அருளால் விரைவில் வெளியில் வர முடியும் என்பது ஐதீகம். காரியத் தடைகள் நீங்கிவிடும். தடையின்றி காரியங்கள் நிகழும். வீட்டின் தரித்திரத்தைப் போக்கி அருளுவார் பைரவர்.

மேலும் ஆன்மிக செய்திகளுக்கு.. https://www.dailythanthi.com/Others/Devotional


Next Story