ஒலிம்பிக் பாதுகாப்பு பணியில் இந்திய மோப்ப நாய்கள்


ஒலிம்பிக் பாதுகாப்பு பணியில் இந்திய மோப்ப நாய்கள்
x

கோப்புப்படம்

33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் வருகிற 26-ந் தேதி கோலாகலமாக தொடங்குகிறது.

பாரீஸ்,

33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் வருகிற 26-ந் தேதி கோலாகலமாக தொடங்குகிறது. 206 நாடுகளை சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். இதன் தொடக்க விழா முதல்முறையாக மைதானத்துக்கு வெளியே, அதாவது சென் நதியில் வித்தியாசமான முறையில் நடக்கிறது. '

தொடக்க விழாவை முன்னிட்டு சென் நதியின் கரையோரத்தில் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவு பகுதியை போலீசார் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். அந்த பகுதிக்குள் முன்கூட்டியே அனுமதி பெற்று இருப்பவர்கள் தவிர வேறு யாரும் நுழைய முடியாது. இந்த கட்டுப்பாடுகள் தொடக்க விழா முடிந்த பிறகு தளர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த போட்டிக்கு வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுமார் 45 ஆயிரம் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் 18 ஆயிரம் ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். பாதுகாப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில் 40 நாடுகளை சேர்ந்த 1,750 பாதுகாப்பு படையினரும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் ஒலிம்பிக் பாதுகாப்பு பணிக்காக இந்தியாவில் இருந்து 10 மோப்ப நாய்கள் பாரீஸ் சென்றுள்ளன. இவற்றில் 6 பெல்ஜியம் ஷெப்பர்டு, 3 ஜெர்மன் ஷெப்பர்டு, ஒரு லாப்ரடர் ரெட்ரீவர் ஆகிய வகையைச் சேர்ந்தவை. இந்த மோப்ப நாய்களை கையாள பயிற்சி பெற்ற மத்திய அரசின் பல்வேறு ஆயுதப்படையை சேர்ந்த 17 பேர் சென்று இருக்கிறார்கள். இந்தியா- பிரான்ஸ் நாடுகள் இடையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த பணி மேற்கொள்ளப்படுகிறது.

இந்த மோப்ப நாய்கள் சந்தேகத்துக்குரிய நபர்களின் இருப்பிடம், குண்டுகளை துல்லியமாக கண்டறிதல் போன்றவற்றில் சிறப்பாக செயல்படும் திறன் படைத்தவை. ஸ்டேடியம் பகுதியில் இவை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படும். இந்தியாவில் இருந்து மோப்ப நாய்கள் வெளிநாட்டிற்கு பாதுகாப்பு பணிக்கு சென்றிருப்பது இதுவே முதல் முறையாகும்.


Next Story