விமானத்தில் செல்லப்பிராணியை அனுமதிக்காததால் நாயை நீரில் மூழ்கடித்து கொன்ற பெண் கைது

விமான நிலைய குளியலறையில் நாயை மூழ்கடித்து கொன்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
வாஷிங்டன்,
அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தைச் சேர்ந்த ஒரு பெண் நாயை செல்லப்பிராணியாக வளர்த்து வந்தார். சொந்த வேலையாக கொலம்பியா செல்ல விரும்பிய அவர் தனது நாயையும் உடன் அழைத்துச் செல்ல விரும்பினார்.
இதற்காக புளோரிடா விமான நிலையம் சென்றபோது முறையான ஆவணம் இல்லாததால் செல்லப்பிராணியை விமானத்தில் கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து விமான நிலைய குளியலறைக்குச் சென்ற அவர் அங்குள்ள ஒரு தொட்டியில் மூழ்கடித்து நாயைக் கொன்றார். பின்னர் விமானத்தில் ஏறி அவர் கொலம்பியா சென்று விட்டார்.
இதற்கிடையே விமான நிலைய கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். இதில் அந்த பெண் நாயுடன் குளியலறைக்குச் சென்றதும், பின்னர் நாய் இல்லாமல் வெறுங்கையுடன் திரும்பியதும் தெரிய வந்தது. அதன்பேரில் போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.