அதிபர் தேர்தலில் டிரம்பை தோற்கடிப்போம்; கமலா ஹாரிஸ் சூளுரை
அமெரிக்க துணை அதிபர் ஹாரிஸ், தேர்தலை முன்னிட்டு கட்சியின் முக்கிய நிர்வாகிகள், செனட் உறுப்பினர்கள் மற்றும் கவர்னர்கள் உள்ளிட்டோரை தொடர்பு கொண்டு ஆதரவு திரட்டி வருகிறார்.
வாஷிங்டன்,
அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். கடந்த 14-ம் தேதி அவர் மீது துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டது அந்நாட்டு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சூழலில், கடந்த 19-ம் தேதி நடந்த குடியரசு கட்சியின் தேசிய மாநாட்டின்போது, அக்கட்சியின் அதிகாரப்பூர்வ அதிபர் வேட்பாளராக டொனால்டு டிரம்ப் அறிவிக்கப்பட்டார். அவரும் அதனை ஏற்றுக்கொண்டார்.
இதேபோன்று, ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிடும் முடிவுடன் பைடன் களம் இறங்கினார். ஆனால், வயது முதிர்வால் சமீபத்திய கூட்டங்களில் பேசும்போது அவர் திணறினார். இதனால், கட்சிக்குள்ளேயே அவருக்கு எதிராக குரல்கள் வலுத்தன. கட்சியினரின் அதிருப்தி அதிகரித்த நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து விலகும் முடிவை எடுத்துள்ளார். அதற்கான அறிவிப்பையும் நேற்று வெளியிட்டார்.
எனினும், அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக ஊடக பதிவில், 2025-ம் ஆண்டு ஜனவரி வரை அதிபராக தொடர்ந்து பதவியில் நீடிப்பேன் என்றும் இந்த வாரம் நாட்டுக்கு உரையாற்றுவேன் என்றும் அவர் பதிவிட்டார்.
அதற்கு அடுத்த 30 நிமிடங்களுக்குள் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிசை முனனிறுத்தினார். அவருக்கான தன்னுடைய முழு ஆதரவையும் பைடன் வெளிப்படுத்தினார். இதனால், குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்புக்கு எதிராக கமலா ஹாரிஸ் வலுவான போட்டியாளராக இருப்பார் என பார்க்கப்படுகிறது.
இதனை தொடர்ந்து ஹாரிஸ், கட்சியின் முக்கிய நிர்வாகிகள், செனட் உறுப்பினர்கள் மற்றும் கவர்னர்கள் உள்ளிட்டோரை தொலைபேசி வழியே தொடர்பு கொண்டு பேசி ஆதரவு திரட்டி வருகிறார்.
இந்த தேர்தலில் தன்னை முன்னிறுத்தியதற்காக ஹாரிஸ் தன்னுடைய நன்றிகளை தெரிவித்து கொண்டார். ஜனநாயக கட்சியை ஓரணியாக திரட்டி, இந்த தேர்தலில் டிரம்பை தோற்கடிப்போம் என்றார். அவரை வீழ்த்தி காட்டுவேன் என்றும் ஹாரிஸ் சூளுரைத்து உள்ளார். ஹாரிசுக்கு கட்சியின் பல்வேறு தரப்பில் இருந்தும் ஆதரவு தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இதன்படி, கலிபோர்னியா மாகாண கவர்னர் கவின் நியூசோம் ஆதரவை வெளிப்படுத்தி உள்ளார். சமீப வாரங்களாக, பைடனுக்கு பதிலாக அதிபர் தேர்தலில் போட்டியிடலாம் என கவின் முன்பே தன்னை முன்னிறுத்தி கூறினார்.
இந்த சூழலில், அவர் வெளியிட்ட செய்தியில், நம்முடைய நாட்டை ஆரோக்கியம் நிறைந்த வழியிலான பயணத்திற்கு வழிகாட்ட அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசை விட சிறந்த வேறொருவர் யாரும் இல்லை. டிரம்ப்பின் இருண்ட தொலைநோக்கு பார்வையை வீழ்த்தி, அமெரிக்க ஜனநாயகம் எதிர்காலத்தில் வளருவதற்கான சரியான, அச்சமற்ற, உறுதி வாய்ந்த நபராக ஹாரிஸ் இருப்பார் என அவர் தெரிவித்து உள்ளார்.