உக்ரைனில் அமெரிக்க தூதரகம் மூடல்


உக்ரைனில் அமெரிக்க தூதரகம் மூடல்
x

உக்ரைன் - ரஷியா போர் தீவிரமடைந்துள்ளது.

வாஷிங்டன்,

உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் தாக்குதல் 1,000வது நாளை எட்டி உள்ளது. உக்ரைனுக்கு அமெரிக்கா, உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. பதில் தாக்குதல் நடத்துவதற்கு தேவையான ஆயுதங்களையும் வழங்கி உதவுகின்றன.

இந்நிலையில், ரஷியாவிற்குள் தொலைதூரத்திற்கு சென்று இலக்குகளை தாக்கி அழிக்கும் ஏவுகணைகளை பயன்படுத்த அமெரிக்கா அனுமதி அளித்தது. இதனால் கோபம் அடைந்த, ரஷிய அதிபர் புதின் கடும் கண்டனம் தெரிவித்தார். அதுமட்டுமின்றி அவர் ரஷிய படைகள் அணு ஆயுதங்களை பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கி அதற்கான ஆவணத்தில் கையெழுத்திட்டார்.

தற்போது இரு நாடுகள் இடையே போர் தீவிரமடைந்துள்ளது. இந்த சூழலில், அமெரிக்கா தயாரித்த 6 நீண்ட தூர ஏவுகணையை ரஷியாவின் பல பகுதிகளில் ஏவி, உக்ரைன் தாக்குதல் நடத்தியது. இதில் 5 ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ரஷியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்தநிலையில், உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் செயல்பட்டு வந்த அமெரிக்க தூதரகம் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தூதரகத்தில் இருப்பவர்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அமெரிக்கா அறிவுறுத்தி உள்ளது. கீவ் நகர் மீது ரஷியா வான்வழித்தாக்குதல் நடத்தக்கூடுமென அஞ்சப்படுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூதரகம் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story