பிறப்பால் குடியுரிமை; அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவுக்கு மேலும் ஒரு கோர்ட்டு தடை
![பிறப்பால் குடியுரிமை; அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவுக்கு மேலும் ஒரு கோர்ட்டு தடை பிறப்பால் குடியுரிமை; அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவுக்கு மேலும் ஒரு கோர்ட்டு தடை](https://media.dailythanthi.com/h-upload/2025/02/06/37873997-trump-new.webp)
அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசிக்கும் பெற்றோருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்குவதை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் டிரம்ப் உத்தரவு பிறப்பித்தார்.
வாஷிங்டன்,
அமெரிக்காவின் 47வது அதிபராக பதவியேற்ற டொனால்ட் டிரம்ப், முதல் வேலை நாளிலேயே, பல்வேறு உத்தரவுகளில் கையெழுத்திட்டார். அதில் ஒன்றாக, அமெரிக்காவில் பிறப்புரிமையின் அடிப்படையில் வெளிநாட்டவருக்கு வழங்கப்படும் குடியுரிமையை ரத்து செய்வது, சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியுள்ள அனைவரையும் நாடு கடத்தும் கொள்கையைக் கடைப்பிடிப்பது என்ற உத்தரவுகளில் கையெழுத்திட்டார்.
இதனால், அமெரிக்காவில் வாழும் எண்ணற்ற வெளிநாட்டவர்களுக்கு கடும் அதிர்ச்சி ஏற்பட்டது. ஆனால் அதேவேளையில், அமெரிக்காவில் குடிபெயர்ந்தவர்களின் குழந்தைகளுக்கு வழங்கப்படும் குடியுரிமையை முடிவுக்குக் கொண்டுவரும் அதிபர் டொனால்ட் டிரம்பின் நிர்வாக உத்தரவைத் தடுக்கக் கோரி அந்நாட்டு கோர்ட்டுகளில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டன.
டிரம்பின் உத்தரவு வரும் 19ம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளது என தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில், கடந்த 24-ம் தேதி, 'இந்த உத்தரவை அமல்படுத்துவதற்கு, அமெரிக்கா மாவட்ட நீதிபதி ஜான் கோஹனூர் தற்காலிக தடை விதித்தார். இந்நிலையில், மற்றொரு அமெரிக்க நீதிபதியும் இதேபோன்று தடை விதித்து உத்தரவிட்டார்.
அமெரிக்கா மாவட்ட நீதிபதி டெபோரா பிறப்பித்த உத்தரவில், பிறப்புரிமை தொடர்பாக டிரம்ப் நிர்வாகத்தின் உத்தரவை நாட்டின் எந்த கோர்ட்டும் ஆதரிக்கவில்லை. இந்த உத்தரவு அரசியலமைப்பிற்கு விரோதமானது. இன்று அமெரிக்கா மண்ணில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் பிறக்கும் போதே அமெரிக்கா குடிமகனாகும்" என்றார்.