வட கொரியா வீரர்கள் 2 பேர் சிறைபிடிப்பு : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி
ரஷிய ராணுவத்தில் இணைந்து தங்களுக்கு எதிராக போரிட்ட 2 வீரர்கள் சிக்கியுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
கீவ்,
உக்ரைன் மற்றும் ரஷியா இடையிலான போர் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து நீடித்து வருகிறது. உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷியாவுக்கு உதவுவதற்காக வடகொரியாவும் தனது ராணுவ வீரர்களை அனுப்பியுள்ளது. இதற்கு கைமாறாக அதிநவீன ஏவுகணை தொழில்நுட்பத்தை வடகொரியாவுக்கு ரஷியா வழங்கியுள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது. அந்தத் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ஏவுகணையை தான் வடகொரியா சோதனை செய்துள்ளதாகவும் அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளும் குற்றம் சாட்டி வருகின்றன.
இதனிடையே, ரஷியாவுக்காக போரிட்ட வடகொரியா வீரர்கள் இருவரை பிடித்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியதாவது: உக்ரைனில் வட கொரியா ராணுவ வீரர்கள் 2 பேர் சிறை பிடிக்கப்பட்டு உள்ளனர். 2 பேரும் பலத்த காயம் அடைந்துள்ளனர்.
ஒருவரின் தாடையில் காயம் ஏற்பட்டுள்ளது. மற்றொரு ராணுவ வீரருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. சர்வதேச விதிகளின்படி வீரர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ரஷியா என்ன செய்கிறது என்பதை உலகம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்" என்றார். மேலும், வடகொரிய வீரர்கள் இருக்கும் வீடியோவையும் ஜெலன்ஸ்கி வெளியிட்டுள்ளார்.