துருக்கியில் எதிர்க்கட்சி தலைவர் கைது; பின்னணி என்ன?

துருக்கியில் பயங்கரவாத வழக்கில் எதிர்க்கட்சி தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இஸ்தான்புல்,
2014 ஆண்டு முதல் துருக்கி அதிபராக தாயூப் எர்டோகன் செயல்பட்டு வருகிறார். நீதி மற்றும் வளர்ச்சி கட்சியை சேர்ந்த எர்டோகன் 1994 முதல் 1998 வரை இஸ்தான்புல் மேயராக செயல்பட்டுள்ளார். மேலும், 2003 முதல் 2014 வரை துருக்கி பிரதமராகவும் செயல்பட்டுள்ளார்.
இதனிடையே, எர்டோகன் சர்வாதிகாரிபோல் செயல்படுவதாக பல ஆண்டுகளாக குற்றச்சாட்டு நிலவி வருகிறது. மேலும், துருக்கியில் எதிர்க்கட்சியின் செயல்பாடுகளை முடக்கும் நடவடிக்கையில் எர்டோகன் ஈடுபட்டு வருகிறார்.
அதேவேளை, துருக்கி எதிர்க்கட்சியான ஜனநாயக மக்கள் கட்சியின் முக்கிய தலைவராக எக்ரிம் இமாமொக்லு திகழ்கிறார். இவர் இஸ்தான்புல் மேயராக செயல்பட்டு வருகிறார்.
2028ம் ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் எர்டோகனை வீழ்த்தி எக்ரிம் இமாமொக்லு வெற்றிபெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளாராக இமாமொக்லு நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க திட்டமிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், இமாமொக்லுவை கடந்த புதன்கிழமை போலீசார் கைது செய்தனர். ஊழல் , பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாக இமாமொக்லு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குகளில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். குர்திஷ் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக செயல்பட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், இமாமொக்லுவின் கல்லூரி பட்டப்படிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. துருக்கியில் அதிபர் தேர்தலில் போட்டியிடவேண்டுமென்றால் வேட்பாளர் கல்லூரி பட்டப்படிப்பை நிறைவு செய்திருக்கிற வேண்டும். தற்போது அவரின் பட்டப்படிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், அவர் அதிபர் தேர்தலில் போட்டியிட தகுதியற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
அதேவேளை, எதிர்க்கட்சி தலைவர் இமாமொக்லு கைது செய்யப்பட்டதை கண்டித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். லட்சக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.