அன்றும் இன்றும்... ஹமாஸ் விடுவித்த பணய கைதிகளின் அதிர்ச்சி கலந்த சோக பின்னணி


அன்றும் இன்றும்... ஹமாஸ் விடுவித்த பணய கைதிகளின் அதிர்ச்சி கலந்த சோக பின்னணி
x

பணய கைதிகளில் ஒருவரான ஷராபி உயிருடன் திரும்பி வந்தபோதும், அவருக்கு துயரமே பரிசாக காத்திருந்தது.

டெல் அவிவ்,

இஸ்ரேலின் தெற்கு பகுதி மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் அமைப்பு கொடூர தாக்குதல் நடத்தியது. அப்போது, எதிரில் தென்பட்ட நபர்களையெல்லாம், அந்த அமைப்பு துப்பாக்கியால் சுட்டும், தாக்கியும் படுகொலை செய்தது. நோவா இசை நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றவர்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டதுடன், நூற்றுக்கணக்கானோர் பணய கைதிகளாக சிறை பிடித்து செல்லப்பட்டனர்.

இதனை தொடர்ந்து காசாவுக்கு எதிராக இஸ்ரேல் போரில் இறங்கியது. எனினும், போர்நிறுத்த ஒப்பந்தம் அடிப்படையில் தொடக்கத்தில் அவர்களில் சிலரை இஸ்ரேல் மீட்டது. மீதமுள்ளவர்களையும் மீட்போம் என சூளுரைத்தது. ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும் வரை ஓயமாட்டோம் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு சபதம் எடுத்துள்ளார். இதற்காக தொடர்ந்து காசா மீது இஸ்ரேல் போரில் ஈடுபட்டது.

ஓராண்டுக்கு மேலாக நடந்து வரும் இந்த தாக்குதலில், காசா பகுதியில் 46 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்து உள்ளனர். லட்சக்கணக்கானோர் காயமடைந்து உள்ளனர். இதனை காசா சுகாதார அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

இந்த சூழலில், போர் நிறுத்த ஒப்பந்தம் அடிப்படையில் இஸ்ரேல் கைதிகள் மற்றும் பாலஸ்தீனிய கைதிகள் பரஸ்பரம் விடுவிக்கப்பட்டு வருகின்றனர். இதன்படி ஹமாஸ் அமைப்பு, ஆர் லெவி, எலி ஷராபி மற்றும் ஓஹாத் பென் அமி ஆகிய 3 பேரை நேற்று விடுவித்தது. இவர்களில் ஆர் லெவி நோவா இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது கடத்தப்பட்டவர். மற்ற 2 பேரும் கிபுட்ஜ் பகுதியில் வைத்து கடத்தப்பட்டனர்.

அவர்கள், காசாவில் உள்ள செஞ்சிலுவை சங்கத்தின் சர்வதேச குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டதும், இஸ்ரேல் படையினரிடம் அனுப்பி வைக்கப்பட்டனர். இதன்பின்னர் அவர்கள் இஸ்ரேலுக்கு சென்றனர். குடும்பத்தினருடன் மீண்டும் ஒன்றிணைந்த அவர்கள், பின்னர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அவர்களில் ஓஹாத் பென் அமி ஊட்டச்சத்து பற்றாக்குறையால் கடுமையாக பாதிக்கப்பட்டவர் போன்று காணப்பட்டார். அவருடைய உடல் எடை வெகுவாக குறைந்திருந்தது. இதேபோன்று லெவி மற்றும் எலி ஷராபி ஆகிய இருவரும் கூட வறுமையால் பாதிக்கப்பட்டவர்கள் போன்ற நிலையில் மெலிந்து காணப்பட்டனர்.

அப்போது அமி நிருபர்களிடம் கூறும்போது, டபுள் எக்ஸ் எல் (XXL) ஆக சென்ற நான் நடுத்தர (மீடியம்) அளவில் திரும்பி வந்துள்ளேன் என நகைச்சுவையாக கூறினார். ஒல்லியாக இருந்த அமி, பின்னர் சக்தியை வரவழைத்து கொண்டு மகள்களை நோக்கி ஓடினார். மகிழ்ச்சியுடனும், கண்ணீருடனும் குடும்பத்துடன் மீண்டும் இணைந்து கொண்டார்.

ஆனால், உயிருடன் திரும்பி வந்தபோதும், ஷராபிக்கு துயரமே பரிசாக காத்திருந்தது. ஹமாஸ் அமைப்பின் தாக்குதலில், ஷராபியின் 2 மகள்கள் மற்றும் பிரிட்டனில் பிறந்தவரான மனைவியும் படுகொலை செய்யப்பட்டனர்.

ஷராபியிடம் அவர்கள் மரணம் அடைந்த விவரம் தெரிவிக்கப்படவில்லை. ஆனால் திரும்பி வந்த அவர், மகிழ்ச்சியில் மனைவியையும் குழந்தைகளையும் எங்கே என கேட்டு தேடினார். அவரை கண்ணீருடன் 2 சகோதரிகள் மற்றும் ஒரு சகோதரன் வரவேற்றனர்.

லெவி, அவருடைய குடும்பத்தினருடன் ஒன்றிணைந்தபோது, நீண்டநேரம் அவர்களை தழுவியபடியும், அழுதபடியும் காணப்பட்டார். இந்த 3 பணய கைதிகளின் விடுவிப்புக்கு ஈடாக, 183 பாலஸ்தீனிய கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.

இவர்கள் 3 பேரும் பணய கைதியாக பிடித்து செல்லப்பட்டபோது இருந்த புகைப்படங்களையும், விடுவிப்புக்கு பின்னரான புகைப்படங்களையும் இஸ்ரேல் வெளியிட்டு உள்ளது. அதில் பெருத்த வேறுபாடு காணப்பட்டது. அவர்களை கண்ட இஸ்ரேல் மக்கள் அதிர்ச்சியில் உறைந்து விட்டனர். அந்த அளவுக்கு மெலிந்து, அடையாளம் காண முடியாத வகையில் காணப்பட்டனர்.


Next Story