'இந்தியாவில் நடந்த ஜி-20 மாநாடு எங்களுக்கு உத்வேகம் அளித்தது' - பிரேசில் அதிபர்

ஜி-20 மாநாட்டில் பிரேசில் பல விஷயங்களை முயற்சித்துள்ளது என அந்நாட்டின் அதிபர் தெரிவித்துள்ளார்.
ரியோ டி ஜெனீரோ,
பிரதமர் நரேந்திர மோடி தனது 3 நாடுகளுக்கான அரசுமுறை பயணத்தின் முதல் கட்டமாக, நைஜீரியா நாட்டிற்கு சென்றார். அங்கு தனது சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த அவர், ஜி-20 மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரேசில் சென்றுள்ளார். இதன் பின்னர் கயானா நாட்டிற்கு பிரதமர் மோடி செல்ல உள்ளார்.
இந்நிலையில், இன்று காலை ரியோ டி ஜெனீரோ நகருக்கு சென்றடைந்த பிரதமர் மோடியை, இந்திய தூதர் சுரேஷ் ரெட்டி தலைமையிலான குழுவினர் வரவேற்றனர். தொடர்ந்து அவருக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் பிரேசில் அதிபர் லூலா டிசில்வாவை சந்தித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.
ரியோ டி ஜெனீரோ நகரில் இன்றும், நாளையும் ஜி-20 உச்சி மாநாடு நடைபெறுகிறது. இதில், 20 உறுப்பு நாடுகளை சேர்ந்த தலைவர்கள், பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். இந்நிலையில், இந்தியாவில் நடந்த ஜி-20 மாநாடு தங்களுக்கு உத்வேகத்தை அளித்தது என பிரதமர் மோடியிடம் பிரேசில் அதிபர் லூலா டிசில்வா தெரிவித்துள்ளார்.
ஜி-20 மாநாட்டை நடத்துவதற்காக பிரேசில் அரசு பல்வேறு முன்னேற்பாடுகளை செய்துள்ளதாகவும், இவை பெரும்பாலும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியாவில் நடந்த ஜி-20 மாநாட்டில் கிடைத்த உத்வேகத்தின் மூலம் செய்யப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் ஜி-20 மாநாட்டை இந்தியா நடத்திய அளவுக்கு பிரேசிலும் நடத்த விரும்புவதாக பிரதமர் மோடியிடம் அவர் தெரிவித்துள்ளார்.