வியட்நாமை உலுக்கியது 'யாகி' புயல்- விமான நிலையங்கள் மூடப்பட்டன


தினத்தந்தி 7 Sept 2024 6:21 PM IST (Updated: 7 Sept 2024 6:21 PM IST)
t-max-icont-min-icon

கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடுமையான சூறாவளி புயல் வியட்நாமை தாக்கியது.

ஹனோய்

யாகி என்று பெயரிடப்பட்ட கடும் சூறாவளி புயல் இன்று மதியம் வியட்நாமை தாக்கியது. புயல் பாதிப்பால் 4 பேர் பலியானதாகவும் 78 பேர் காயமடைந்ததாகவும் வியட்நாம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வியட்நாமிய வானிலை அதிகாரிகள் கூறும்போது "கடந்த 10 ஆண்டுகளில் இந்த பிராந்தியத்தை தாக்கிய மிகவும் சக்திவாய்ந்த சூறாவளிபுயல் இது " என்று தெரிவித்தனர்.

முன்னதாக சீனாவின் தென்பகுதியை தாக்கிய இந்த புயல் காரணமாக அந்நாட்டில் 3 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். புயல் காரணமாக வியட்நாம் அரசாங்கம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது. வெள்ளம் அல்லது நிலச்சரிவுகளால் பாதிக்கப்படக்கூடியவர்கள் வெளியேற்றப்பட்டனர். தலைநகர் ஹனோய் மற்றும் ஹைபோங் நகரம் உள்ளிட்ட நான்கு இடங்களில் உள்ள விமான நிலையங்கள் மூடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story