பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்; 12 பாதுகாப்பு படை வீரர்கள் பலி

பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 12 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்தனர்.
இஸ்லாமாபாத்,
பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள கைபர் பக்டுங்க்வா மற்றும் பலுசிஸ்தான் ஆகிய மாகாணங்களில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக தொடர் பயங்கரவாத தாக்குதல்கள் அரங்கேறி வருகின்றன. குறிப்பாக காவல்துறை மற்றும் ராணுவ வாகனங்களை குறித்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், கைபர் பக்டுங்க்வா மாகாணத்தில் நேற்று இரவு பாதுகாப்பு படையினரின் சோதனைச் சாவடி மீது பயங்கரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்தியுள்ளனர். வெடிகுண்டுகள் நிரப்பிய கார் ஒன்று வேகமாக வந்து சோதனைச் சாவடி மீது மோதி வெடித்துச் சிதறியது. இந்த தாக்குதலில் 12 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்தனர்.
குண்டுவெடிப்பை தொடர்ந்து பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படை வீரர்களிடையே துப்பாக்கி சூடு நடந்தது. இதில் 6 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பயங்கரவாத தாக்குதலில் காயமடைந்த ராணுவ வீரர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தற்போது அந்த பகுதியில் அதிக அளவில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.