உக்ரைன் போர் முடிவுக்கு வருமா? அமெரிக்கா, ரஷியா பேச்சுவார்த்தை

உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவருவது குறித்து அமெரிக்கா, ரஷியா பேச்சுவாத்தை நடத்த உள்ளன.
ரியாத்,
உக்ரைன், ரஷியா இடையேயான போர் இன்று 1 ஆயிரத்து 89வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் முயற்சித்து வருகிறார்.
போர் நிறுத்தம் தொடர்பாக ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் உடன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
அதேவேளை, தங்கள் கருத்துக்களை கேட்காமல் அமைதி பேச்சுவார்த்தை சாத்தியமில்லை என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். மேலும், நேட்டோ அமைப்பு இல்லாமல் தங்களுக்கென்று தனியே படையை ஐரோப்பிய யூனியன் உருவாக்க வேண்டுமென்றும் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.
ஆனால், உக்ரைனில் நடைபெற்று வரும் போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்பதில் டொனால்டு டிரம்ப் உறுதியாக உள்ளார்.
இந்நிலையில், உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவருவது தொடர்பாக அமெரிக்காவும், ரஷியாவும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளன.
இந்த பேச்சுவார்த்தை சவுதி அரேபியாவில் நடைபெற உள்ளது. அமெரிக்கா சார்பில் அந்நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி மார்கோ ரூபியோ மற்றும் உக்ரைன், ரஷியாவுக்கான அமெரிக்க சிறப்பு தூதர் கீத் கெலொக் ஆகியோர் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்கின்றனர்.
ரஷியா சார்பில் அந்நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி செர்ஜி லவ்ரோ மற்றும் அதிபர் புதினின் வெளியுறவுத்துறை கொள்கை ஆலோசகர் யுரி உஷாகவ் ஆகியோர் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்கின்றனர். சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
அமெரிக்கா, ரஷியா இடையே நடைபெறும் பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு எட்டப்படும் பட்சத்தில் உக்ரைனில் போர் முடிவுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.