உக்ரைன் போருக்கு பின்னர் முதன்முதலாக... ரஷியாவுக்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணம்
பிரதமர் மோடியுடனான சந்திப்பு, இருதரப்பு உறவுகளில் முன்னேற்றம் மற்றும் அனைத்து நடப்பு சூழல்களை பற்றி ஆலோசிப்பதற்கான ஒரு வாய்ப்பாக அமையும் என மத்திய மந்திரி ஜெய்சங்கரிடம் புதின் முன்பு கூறினார்.
மாஸ்கோ,
உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போரானது 2 ஆண்டுகளை கடந்தும் நீடித்து வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வர தூதரக அளவிலான பேச்சுவார்த்தையில் இரு நாடுகளும் ஈடுபட வேண்டும் என்று இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
ஆனால், இதற்கு இரு நாடுகளும் உடன்படவில்லை. எனினும், ரஷியாவுடனான இந்தியாவின் நல்லுறவு தொடர்ந்து வலுவாக உள்ளது. இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் ரஷியாவுக்கு வருகை தரும்படி பிரதமர் மோடிக்கு அழைப்பு விடப்பட்டது.
கடைசியாக கடந்த 2019-ம் ஆண்டு ரஷியாவுக்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அவர், கிழக்கு நகரான விளாடிவோஸ்டாக்கிற்கு சென்றார். இந்த சூழலில், பிரதமர் மோடி வருகிற ஜூலையில் ரஷியாவுக்கு சுற்றுப்பயணம் செய்ய கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பயணத்தில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து பேசுவார் என கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து, பிரதமர் மோடியை வரவேற்பதற்காக, ரஷியா தயாராகி வருகிறது.
கடந்த ஆண்டு டிசம்பரில் மத்திய வெளிவிவகார மந்திரி ஜெய்சங்கர் ரஷியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது கிரெம்ளின் மாளிகையில், அந்நாட்டு அதிபர் புதினை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது ஜெய்சங்கரிடம் விளாடிமிர் புதின் பேசும்போது, எங்களுடைய நண்பர் பிரதமர் மோடியை ரஷியாவில் பார்ப்பதற்கு ஆவலாக இருக்கிறேன் என கூறினார்.
பிரதமர் மோடியுடனான சந்திப்பு, இருதரப்பு உறவுகளில் முன்னேற்றம் காண்பதற்கும், அனைத்து நடப்பு சூழல்களை பற்றி ஆலோசிப்பதற்கான ஒரு வாய்ப்பாக அமையும் என்று அப்போது அவர் கூறினார்.
உலக அளவில் 3-வது மிக பெரிய கச்சா எண்ணெய் நுகர்வோராக இந்தியா இருப்பதுடன், 2022-வது ஆண்டில் உக்ரைன் மீது ரஷியா படையெடுத்ததற்கு பின், சலுகை விலையில் ரஷியாவிடம் இருந்து இந்தியா எண்ணெய்யை அதிக அளவில் கொள்முதல் செய்து வரும் நாடாகவும் உள்ளது. இரு நாடுகளும், பொருளாதார மற்றும் அரசியல் ரீதியாகவும் ஆழ்ந்த நட்பை கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.