நைஜீரியா அதிபருடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை

நைஜீரியா அதிபருடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.
அபுஜா,
அரசு முறை பயணமாக பிரதமர் மோடி நைஜீரியா சென்றுள்ளார். 17 ஆண்டுகளுக்குப்பின் நைஜீரியா செல்லும் முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை மோடி பெற்றுள்ளார். தலைநகர் அபுஜா சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அபுஜாவில் வசித்து வரும் நைஜீரியா வாழ் இந்தியர்களை பிரதமர் மோடி சந்தித்தார்.
இந்நிலையில், நைஜீரியா அதிபர் போலா அகமது தினுபுவை பிரதமர் மோடி இன்று சந்தித்தார். தலைநகர் அபுஜாவில் உள்ள அதிபர் மாளிகையில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது இருநாட்டு தலைவர்களும் முக்கிய விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இருநாட்டு உறவு, வர்த்தகம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
நைஜீரியா பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி பிரேசிலில் நாளை நடைபெற உள்ள ஜி20 மாநாட்டில் பங்கேற்கிறார். அதன்பின்னர், பிரேசில் பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி கயானா செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.