நிலைகுலையச் செய்த பனிப்புயல்.. நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து மோதிய 100 வாகனங்கள்
கிட்டத்தட்ட 100 வாகனங்கள் விபத்துக்குள்ளாகி, சாலையில் குறுக்கும் நெடுக்குமாக கிடந்ததால் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
அஸ்தானா:
கஜகஸ்தான் நாட்டில் வாகன போக்குவரத்து அதிகம் உள்ள சாலைகளில் அஸ்தானா-சூசின்ஸ்க் நெடுஞ்சாலையும் ஒன்று. எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த சாலையில் இன்று மதியம் சென்றுகொண்டிருந்த வாகனங்கள் திடீரென ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின. அக்மோலா பிராந்தியத்தில் உள்ள கோகம், கராடல் ஆகிய கிராமங்களுக்கு மத்தியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
மோசமான வானிலை மற்றும் திடீரென ஏற்பட்ட பனிப்புயல் காரணமாக நிலைகுலைந்த வாகன ஓட்டிகள், வாகனங்களை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. கிட்டத்தட்ட 100 வாகனங்கள் விபத்துக்குள்ளாகி சாலையில் குறுக்கும் நெடுக்குமாக கிடந்ததால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. போலீசார் அந்த வாகனங்களை அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.
மோசமான வானிலை குறித்து அவசரகால சேவைகள் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். மேலும், சாலைவழி பயணங்களை தவிர்க்கவேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளனர்.