பயங்கரவாத குற்றச்சாட்டு: இம்ரான்கான் கட்சி தலைவர்கள் 350 பேர் மீது வழக்குப்பதிவு


பயங்கரவாத குற்றச்சாட்டு: இம்ரான்கான் கட்சி தலைவர்கள் 350 பேர் மீது வழக்குப்பதிவு
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 26 Sept 2024 1:39 AM IST (Updated: 26 Sept 2024 8:30 AM IST)
t-max-icont-min-icon

பாகிஸ்தானில் இம்ரான்கான் கட்சி தலைவர்கள் 350 பேர் மீது பயங்கரவாத குற்றச்சாட்டுகளை போலீசார் பதிவு செய்துள்ளனர்.

இஸ்லாமாபாத்,

கைபர் பக்துன்க்வா முதல்-மந்திரி அலி அமீன் கந்தாபூர் உட்பட சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் கட்சியைச் சேர்ந்த 350க்கும் மேற்பட்ட தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் மீது பாகிஸ்தானின் பஞ்சாப் காவல்துறை பயங்கரவாதம் மற்றும் பிற குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது.

முன்னதாக இம்ரான்கானின் பாகிஸ்தான்-தெஹ்ரீப்-இ-இன்சாப் கட்சி பஞ்சாப் மாகாணத்தில் லாகூர் நகரில் பிரமாண்ட பேரணி நடத்த முடிவு செய்தது. ஆனால் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மகள் மரியம் நவாஸ் தலைமையிலான பஞ்சாப் மாகாண அரசு முதலில் இந்த பேரணிக்கு அனுமதி மறுத்தது. எனினும் பின்னர் பல்வேறு நிபந்தனைகளுடன் பேரணிக்கு அனுமதி வழங்கப்பட்டது. பேரணியை நடத்தவிடாமல் தடுக்க போலீசார் பலவழிகளில் நெருக்கடி கொடுத்தனர். இருந்தபோதிலும் இம்ரான்கான் கட்சியினர் பேரணியை வெற்றிகரமாக நடத்தினர்.

இந்த பேரணியின்போது கட்சியினருக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் போலீசார் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியதாக கூறி இம்ரான்கான் கட்சியை சேர்ந்த தலைவர்கள் 350 பேர் மீது பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் கொலை முயற்சி குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து கட்சி தலைவர்களை கைது செய்வதற்கான தீவிர நடவடிக்கையில் போலீசார் தீவிரமாக இறங்கியுள்ளனர்.


Next Story