மசோதாவுக்கு எதிர்ப்பு: நியூசிலாந்து நாடாளுமன்றத்தை அதிரவைத்த இளம் பெண் எம்.பி.

நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட புதிய மசோதாவிற்கு பழங்குடியின பெண் எம்.பி கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
ஆக்லாந்து,
நியூசிலாந்தின் 170 ஆண்டு கால வரலாற்றில், 21 வயதான ஹனா ரவ்ஹிதி மைபி கிளார்க் என்ற இளம் பெண் எம்.பி ஆகி உள்ளார். மாவோரி இனத்தைச் சேர்ந்த இவரது குடும்பம் 3 தலைமுறைகளுக்கு மேல் அரசியலில் உள்ளது. நாடாளுமன்றத்தில் மாவோரி பழங்குடியின மொழியில் தனது கன்னிப்பேச்சினை பதிவு செய்தது உலக அளவில் கவனம் பெற்றது.
இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட மசோதாவிற்கு, தனது பழங்குடியின பாரம்பரியத்துடன் இளம்பெண் எம்.பி. நடனமாடி எதிர்ப்பு தெரிவித்தார். இது தற்போது மீண்டும் வைரலாகி வருகிறது. இது குறித்த விவரம் வருமாறு:
1840-ல் பிரிட்டன் அரசு பிரதிநிதிகளுக்கும், நியூசிலாந்தின் வடக்குத் தீவில் இருக்கும் பூர்வக்குடிகளாக அறியப்படும் மாவோரி தலைவர்களுக்கும் இடையே 'வைதாங்கி ஒப்பந்தம்' மேற்கொள்ளப்பட்டது. இதில் மாவோரி பூர்வக்குடிகளுக்கு சில சலுகைகளும், உரிமைகளையும் வழங்க வகை செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான ஒப்பந்தத்தில் மாற்றம் செய்ய நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் அண்மையில் ஒரு மசோதா கொண்டு வரப்பட்டது. இந்த மசோதாவுக்கு டி பாடி மவோரி கட்சி எம்.பி.,க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். முதலில் இளம் எம்.பி. ஹானா பழங்குடி பாடலுடன் மசோதா நகலை கிழித்தெறிந்து அவையின் நடுவே வந்து போராட்ட முழக்கம் எழுப்ப அவருடன் பிற மபோரி எம்.பி.க்களும் இணைந்து கொண்டனர். அவர்களின் பழங்குடியினப் பாடலும், அதற்கேற்ற ஆவேச நடனமும் நியூசிலாந்து நாடாளுமன்றத்தை அதிரவைத்தது. இதனால், வேறு வழியின்றி அவையை ஒத்திவைத்தார்.