இஸ்ரேல் மீது நேரடி தாக்குதல் நடத்துங்கள்; ஈரான் தலைவர் அதிரடி உத்தரவு


இஸ்ரேல் மீது நேரடி தாக்குதல் நடத்துங்கள்; ஈரான் தலைவர் அதிரடி உத்தரவு
x
தினத்தந்தி 1 Aug 2024 6:29 AM IST (Updated: 1 Aug 2024 8:31 AM IST)
t-max-icont-min-icon

ஈரான் அரசு ஏமன், சிரியா மற்றும் ஈராக் நாடுகளுடன் இணைந்து தாக்குதல் நடத்துவது பற்றியும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது என அந்நாட்டு ராணுவ அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

தெஹ்ரான்,

ஈரான் அதிபர் மசூத் பெஜஷ்கியான் பதவியேற்பு நிகழ்ச்சி கடந்த செவ்வாய் கிழமை காலையில் நடந்தது. இதில், ஹமாஸ் அமைப்பின் தலைவரான இஸ்மாயில் ஹனியே கலந்து கொண்டார். அவர் நிகழ்ச்சிக்கு பின், ஈரான் தலைவர் அயோதுல்லா அலி காமினியை சந்தித்து பேசினார்.

அதன்பின்னர், ஈரான் நாட்டின் தலைநகர் தெஹ்ரானில் இருந்தபோது படுகொலை செய்யப்பட்டார். இது ஈரானை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இந்நிலையில், ஈரான் தலைவர் அயோதுல்லா அலி காமினி, இஸ்ரேல் மீது நேரடி தாக்குதலை நடத்தும்படி தன்னுடைய படைகளுக்கு உத்தரவிட்டு உள்ளார்.

இதற்கு முன் நேற்று காலை தேசிய பாதுகாப்பு கவுன்சிலுடன் அவசரகால கூட்டம் ஒன்றை காமினி நடத்தினார். இதில் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது என கூறப்படுகிறது. ஹனியே படுகொலையை தொடர்ந்து அவர் இந்த உத்தரவை பிறப்பித்து உள்ளார். இந்த படுகொலைக்கு இஸ்ரேலே காரணம் என ஈரான் மற்றும் ஹமாஸ் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

எனினும், ஹனியேவை படுகொலை செய்த விசயங்களை இஸ்ரேல் ஏற்கவோ, மறுக்கவோ இல்லை. கடந்த காலங்களில் எதிரிகளை வெளிநாடுகளில் கொன்ற வரலாற்றை இஸ்ரேல் கொண்டுள்ளது. ஈரான் அணு விஞ்ஞானிகள் மற்றும் ராணுவ தளபதிகளும் இந்த வரிசையில் அடங்குவார்கள்.

இதுபற்றி ஈரான் அதிகாரிகள் கூறும்போது, ஈரான் அரசு எந்தளவுக்கு வலிமையுடன் பதிலடி கொடுக்கும் என்பது தெளிவாக தெரியவில்லை.

டெல் அவிவ் மற்றும் ஹைபா நகரங்கள் மீது ஆளில்லா விமானங்கள் மற்றும் ராக்கெட்டுகளை கொண்டு ஈரான் ராணுவ தளபதிகள் கூட்டான தாக்குதலை நடத்த கூடும் என பார்க்கப்படுகிறது. ஆனால், குடிமக்கள் மீது தாக்குதல் நடக்காமல் தவிர்க்கும் வகையில் கவனம் கொள்ளப்படும் என்று தெரிவித்தனர்.

ஈரான் அரசு தன்னுடைய கூட்டு படைகள் அமைந்த ஏமன், சிரியா மற்றும் ஈராக் நாடுகளுடன் இணைந்து தாக்குதல் நடத்துவது பற்றியும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது என அவர்கள் தெரிவித்து உள்ளனர்.

ஈரான் மீது இஸ்ரேலோ அல்லது அமெரிக்காவோ தாக்குதல் நடத்தினால் போரை விரிவுப்படுத்தும்படியும், அதற்கேற்ப தயாராகும்படியும் படைகளுக்கு காமினி உத்தரவிட்டு உள்ளார்.

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு கடந்த ஆண்டு அக்டோபரில் கொடூர தாக்குதல் நடத்தியது. இதில், இஸ்ரேல் மக்கள் பலர் படுகொலை செய்யப்பட்டனர். பணய கைதிகளாக சிலர் சிறை பிடித்து செல்லப்பட்டனர்.

அந்த நாளில் இருந்து, இரு தரப்பினருக்கும் இடையேயான மோதல் முற்றியுள்ளது. போர்நிறுத்த ஒப்பந்த அடிப்படையில் பணய கைதிகளாக பிடித்து செல்லப்பட்டவர்களில் ஒரு சிலரை இஸ்ரேல் மீட்டது.

எனினும், காசாவை இலக்காக கொண்டு இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் 39 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் பலியாகி உள்ளனர்.

பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக, ஹிஜ்புல்லா பயங்கரவாத அமைப்பும் போரில் ஈடுபட்டு வருகிறது. இஸ்ரேலை தாக்கி வருகிறது. இந்நிலையில், இஸ்ரேலின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள கோலன் ஹைட்ஸ் பகுதியில் கால்பந்து திடல் ஒன்றில் திடீரென சில நாட்களுக்கு முன் ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த திடீர் தாக்குதலில், குழந்தைகள் உள்பட 12 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். இதற்கு முன், லெபனான் நாட்டின் தெற்கு பகுதியில் வான்வழியே இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், ஹிஜ்புல்லா பயங்கரவாத குழுவை சேர்ந்த 3 பேர் கொல்லப்பட்டனர். அதற்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.

இந்நிலையில், ஈரான் ஆதரவு பெற்ற ஹிஜ்புல்லா குழுவினரின் தாக்குதலுக்கு பதிலடியாக, இஸ்ரேல் பாதுகாப்பு படையினர், லெபனானின் தலைநகர் பெய்ரூட்டின் தெற்கு பகுதியை இலக்காக கொண்டு நேற்று முன்தினம் கடுமையாக தாக்கினர்.

இஸ்ரேல் மக்கள் படுகொலைக்கு பொறுப்பான ஹிஜ்புல்லா அமைப்பை குறி வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது என அதுபற்றி இஸ்ரேல் பாதுகாப்பு படை வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது.

ஆளில்லா விமானம் கொண்டு 3 ராக்கெட்டுகள் ஏவப்பட்டதில் பெண் ஒருவர் பலியானார். பலர் காயமடைந்து உள்ளனர் என லெபனான் நாட்டு ஊடக தகவல் தெரிவிக்கின்றது. இஸ்ரேல் நடத்திய இந்த தாக்குதலுக்கு லெபனானில் உள்ள ஈரான் தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்தது. இந்த நிலையில், ஹனியே படுகொலை செய்யப்பட்டது, தாக்குதல் நடத்தும் முடிவுக்கு ஈரானை தள்ளியுள்ளது.


Next Story