சிரியாவில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் - பலி எண்ணிக்கை 79 ஆக உயர்வு
சிரியாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 79 ஆக உயர்ந்துள்ளது.
டமாஸ்கஸ்,
காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.
மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது.
இதையடுத்து ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் 117 பணய கைதிகளை உயிருடன் மீட்டுள்ளது.
அதேபோல், ஹமாஸ் ஆயுதக்குழுவினர்களால் கடத்தப்பட்டு கொல்லப்பட்ட பணய கைதிகளின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. ஆனால், 101 இஸ்ரேலியர்கள் ஹமாஸ் வசம் பணய கைதிகளாக உள்ளனர் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இதில், பலர் உயிரிழந்திருக்கலாம் எனவும் தகவல் வெளியாகியிருந்தது.
அதேவேளை, இந்த போரில் காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 43 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், மேற்குகரையில் ஏற்பட்ட மோதலில் 700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இதனிடையே, இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் ஓராண்டை கடந்து நீடித்து வருகிறது. அதேவேளை, இந்த போரில் ஹமாசுக்கு ஆதரவாக லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பினர், ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள், சிரியாவில் செயல்பட்டு வரும் பயங்கரவாத குழுக்கள் இஸ்ரேல் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த தாக்குதல்களுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது.
இந்நிலையில், சிரியா மீது இஸ்ரேல் நேற்று வான்வழி தாக்குதல் நடத்தியது. சிரியாவின் பல்ரிம்யா பகுதியில் ஈரான் ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதலில் 36 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியானது. அதேவேளை, பலி எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.
அதன்படி, சிரியாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் உயிரிழந்த ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் எண்ணிக்கை 79 ஆக அதிகரித்துள்ளது.