நான் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டால் எலான் மஸ்க்கிற்கு மந்திரி பதவி - டிரம்ப் அறிவிப்பு


நான் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டால் எலான் மஸ்க்கிற்கு மந்திரி பதவி - டிரம்ப் அறிவிப்பு
x
தினத்தந்தி 20 Aug 2024 8:34 PM IST (Updated: 21 Aug 2024 12:54 PM IST)
t-max-icont-min-icon

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் டிரம்ப்பிற்கு, எலான் மஸ்க் ஆதரவு தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன்,

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 5-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி வேட்பாளராக கமலா ஹாரிஸ், அறிவிக்கப்பட்டு உள்ளார். தற்போது அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் பிரசாரம் களைகட்டி உள்ளது.

இந்த நிலையில் அமெரிக்கா அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸே முன்னிலையில் இருப்பதாக கருத்துக்கணிப்புகள் வெளியாகி இருக்கிறது, வாஷிங்டன் போஸ்ட், ஏபிசி நியூஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் புதிய கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டு இருக்கின்றன. அதில் கமலா ஹாரிசுக்கு 49 சதவீத ஆதரவும் டொனால்ட் டிரம்புக்கு 45 சதவீத ஆதரவும் இருப்பதாக கூறப்பட்டிருக்கிறது.

இதனிடையே டொனால்ட் டிரம்பிற்கு ஸ்பேஸ் எக்ஸ் டெஸ்லா மற்றும் எக்ஸ் வலைத்தளத்தின் உரிமையாளரான எலான் மஸ்க் ஆதரவளித்து வருகிறார்.

இந்நிலையில் டொனால்ட் டிரம்ப் அமெரிக்கா ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது நீங்கள் வெற்றி பெற்றால் எலான் மஸ்குக்கு ஆட்சியில் பதவி வழங்குவீர்களா? என கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த டொனால்ட்,நிச்சயம் நான் மறுபடியும் வெற்றி பெற்று வெள்ளை மாளிகைக்கு திரும்புவேன். என்னுடைய நிர்வாகத்தில் பங்கேற்க எலான் மஸ்க் தயாராக இருந்தால் மந்திரி பதவி அல்லது ஆலோசகர் பதவி வழங்குவேன். அவர் ஒரு புத்திசாலித்தனமான மனிதர் என கூறினார். டிரம்ப் அளித்துள்ள இந்த வாய்ப்பை ஏற்றுக்கொள்வதாக எலான் மஸ்க் தனது எக்ஸ் வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.


Next Story