தென்கொரியாவில் உயர் பொறுப்பில் உள்ளவர்களின் பதவி அடுத்தடுத்து பறிப்பு
தென்கொரியாவில் உயர் பொறுப்பில் உள்ளவர்களின் பதவிகள் அடுத்தடுத்து பறிக்கப்பட்டு வருகின்றன.
சியோல்,
தென்கொரியாவில் கடந்த 3-ந்தேதி அதிபர் யூன் சுக் இயோல் திடீரென ராணுவ அவசர நிலையை பிரகடனப்படுத்தினார். பின்னர் மக்களின் கடும் எதிர்ப்பால் அவசர நிலையை வாபஸ் பெற்றார். இதனை தொடர்ந்து தென்கொரிய அதிபரை பதவிநீக்கம் செய்யும் தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்தன.
ஆனால் அந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை ஆளுங்கட்சியினர் புறக்கணித்ததால், தீர்மானம் தோல்வி அடைந்தது. தொடர்ந்து 2-வது முறையாக பதவிநீக்க தீர்மானத்தை தாக்கல் செய்ய எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இதற்கிடையில், தென்கொரியாவில் ராணுவ அவசர நிலையை அறிவிக்க தூண்டுதலாக இருந்ததாகவும், அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாகவும் ராணுவ மந்திரி கிம் யாங் ஹியூன் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில், தென்கொரியாவில் உயர் பொறுப்பில் உள்ளவர்களின் பதவிகள் அடுத்தடுத்து பறிக்கப்பட்டு வருகின்றன. தென்கொரியாவின் நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பை தொடர்ந்து அந்நாட்டின் தேசிய காவல்துறைத் தலைவர் மற்றும் நீதித்துறை மந்திரி ஆகியோர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.