ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கு: டொனால்டு டிரம்ப் குற்றவாளி


ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கு: டொனால்டு டிரம்ப் குற்றவாளி
x
தினத்தந்தி 31 May 2024 12:44 PM IST (Updated: 1 Jun 2024 8:32 AM IST)
t-max-icont-min-icon

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றவாளி என கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.

வாஷிங்டன்,

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப். இவர் 2017 முதல் 2021ம் ஆண்டு வரை அமெரிக்க அதிபராக பணியாற்றினார். இதனிடையே, டிரம்ப் தன்னுடன் பாலியல் உறவு கொண்டதாக அமெரிக்காவை சேர்ந்த ஆபாச பட நடிகையான ஸ்டோமி டெனியல்ஸ் குற்றச்சாட்டினார். 2006ம் ஆண்டு ஜூலை மாதம் டொனால்டு டிரம்ப் ஓட்டலில் வைத்து தன்னுடன் பாலியல் உறவு கொண்டதாக ஸ்டோமி டெனியல்ஸ் தெரிவித்தார். ஆனால், இந்த குற்றச்சாட்டை டிரம்ப் மறுத்துள்ளார்.

அதேவேளை, 2016ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்பு தன்னுடனான பாலியல் உறவு விவகாரத்தை வெளியே கூறிவிடக்கூடாது என்பதற்காக டிரம்ப் தனக்கு பணம் கொடுத்ததாகவும் ஸ்டோமி டெனியல்ஸ் தெரிவித்தார்.

தேர்தல் பிரசார நிதியாக ஒதுக்கப்பட்ட பணத்தில் இருந்து டொனால்டு டிரம்ப் போலியான வணிக பதிவுகளை (business records) உருவாகியுள்ளார். இதன் பின்னர் தனது முன்னாள் வழக்கறிஞரான மைக்கெல் கோஹன் மூலம் ஸ்டோமி டெனியல்சுக்கு அந்த பணத்தில் இருந்து 1 லட்சத்து 30 ஆயிரம் அமெரிக்க டாலர்களை டொனால்டு டிரம்ப் கொடுத்துள்ளார்.

இந்த விவகாரம் 2018ம் ஆண்டு வால் ஸ்டிரிட் ஜெர்னல் செய்தி நிறுவனம் நடத்திய ரகசிய ஆய்வில் தெரியவந்தது. தேர்தல் பிரசாரத்திற்கு திரட்டப்பட்ட பணத்தை போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்து ஸ்டோமி டெனியல்சுக்கு டிரம்ப் பணம் கொடுத்தது தெரியவந்தது. இந்த விவகாரம் பூதாகாரணம நிலையில் டொனால்டு டிரம்பிற்கு எதிராக பணமோசடி உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்றது.

இந்நிலையில், பண மோசடி வழக்கில் டொனால்டு டிரம்ப் குற்றவாளி என மன்ஹாட்டன் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது. பணமோசடி உள்பட 34 பிரிவுகளில் டொனால்டு டிரம்ப் குற்றவாளி என கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.

டொனால்டு டிரம்பிற்கு அடுத்த மாதம் 11ம் தேதி தண்டனை வழங்கப்பட உள்ளது. பணமோசடி வழக்கில் அதிகபட்சமாக 4 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படலாம். அதேவேளை, குறைந்தபட்ச தண்டனையும் வழங்கப்படலாம். தண்டனை நீதிபதியின் முடிவுக்கு உட்பட்டதாகும். அமெரிக்க நாடாளுமன்ற அதிபர் தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள நிலையில் குடியரசு கட்சி அதிபர் வேட்பாளராக டொனால்டு டிரம்ப் விரைவில் அறிக்கப்பட உள்ளார். இந்த சூழ்நிலையில் குற்றவழக்கில் டொனால்டு டிரம்ப் குற்றவாளி என கோர்ட்டு அறிவித்துள்ள நிகழ்வு அமெரிக்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story