இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் ராணுவ தளபதி முகமது தைப் பலி


இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் ராணுவ தளபதி முகமது தைப் பலி
x
தினத்தந்தி 1 Aug 2024 9:29 AM GMT (Updated: 1 Aug 2024 9:57 AM GMT)

ஹமாஸ் ராணுவ தளபதி முகமது தைப் படுகொலை செய்யப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.

காசா,

காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் கடத்திச் சென்றது.

இதையடுத்து ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் ஒப்பந்த அடிப்படையில் பணய கைதிகள் 100-க்கும் மேற்பட்டோரை மீட்டுள்ளது. மேலும், காசாவில் இஸ்ரேல் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போரில் காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 39 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவரான இஸ்மாயில் ஹனியி (வயது 62) நேற்று கொல்லப்பட்டார். ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள வீட்டில் இஸ்மாயில் படுகொலை செய்யப்பட்ட நிலையில், அவரது படுகொலைக்கு இஸ்ரேலை பழிவாங்குவோம் என ஈரான் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் ராணுவ தளபதி முகமது தைப் படுகொலை செய்யப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. இவர் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் என்று கூறப்படுகிறது.

கடந்த ஜூலை 13-ந்தேதி தெற்கு காசாவில் முகமது தைப் வசித்து வந்த கான் யூனிஸ் பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது. அந்த தாக்குதலில் முகமது தைப் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டு வந்த நிலையில், அவர் உயிரிழந்த செய்தியை இஸ்ரேல் பாதுகாப்பு படை தற்போது உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story