அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 5 பேர் பலி: பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தகவல்


அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 5 பேர் பலி: பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தகவல்
x
தினத்தந்தி 27 Aug 2024 7:52 AM GMT (Updated: 27 Aug 2024 12:30 PM GMT)

ஷம்ஸ் அகதிகள் முகாமில் கொல்லப்பட்ட 5 பேரின் உடல்கள் துல்கர்ம் மாகாணத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கெய்ரோ,

காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் கடத்திச் சென்றது.

இதையடுத்து ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் ஒப்பந்த அடிப்படையில் பணய கைதிகள் 100-க்கும் மேற்பட்டோரை மீட்டுள்ளது. மேலும், காசாவில் இஸ்ரேல் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போரில் காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதில் 93 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில், மேற்கு கரையின் துல்கர்ம் மாகாணத்தில் உள்ள நூர் ஷம்ஸ் அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. நூர் ஷம்ஸ் அகதிகள் முகாமில் கொல்லப்பட்ட 5 பேரின் உடல்கள் துல்கர்ம் மாகாணத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, கடந்த ஆண்டு அக்டோபரில் இஸ்ரேலிய ராணுவத்தின் நடவடிக்கைகளால் மேற்கு கரையில் மொத்தம் 632 பேர் உயிரிழந்ததாக பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.


Next Story