பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டில் கெஜ்ரிவால் வழக்கை உதாரணம் காட்டிய இம்ரான் கான்


பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டில் கெஜ்ரிவால் வழக்கை உதாரணம் காட்டிய இம்ரான் கான்
x
தினத்தந்தி 7 Jun 2024 3:51 PM GMT (Updated: 7 Jun 2024 3:52 PM GMT)

இந்தியாவில் டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் பிரசாரம் செய்ய இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டது. ஆனால், பாகிஸ்தானில் தனக்கு எதிராக அடக்குமுறை கட்டவிழ்த்தப்படுகிறது இம்ரான் கான் கூறியுள்ளார்.

இஸ்லமபாத்,

கிரிக்கெட் வீரராக இருந்து அரசியலில் குதித்தவர் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான். கடந்த 2021 ஆம் ஆண்டு இம்ரான் கான் அரசுக்கு பெரும்பான்மை இல்லாததை அடுத்து தனது பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். அதன்பிறகு இம்ரான் கான் மீது பல்வேறு வழக்குகள் தொடுக்கப்பட்டன. இதையடுத்து கைது செய்யப்பட்ட இம்ரான் கான் தற்போது சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

இதற்கிடையே, வழக்கு ஒன்று தொடர்பாக பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு முன்பு இம்ரான் கான் ஆஜரானார். அப்போது நீதிபதி ஒருவர், லட்சக்கணக்கான ஆதரவாளர்களுடன் கட்சி தலைவராக உள்ள இம்ரான் கான் சிறையில் அடைக்கப்பட்டு இருப்பது வருத்தத்திற்குரியது என்றார்.

இதனை தொடர்ந்து நீதிபதிகள் முன்பு இம்ரான் கான் கூறியதாவது: இந்தியாவில் பொதுத்தேர்தலை முன்னிட்டு பிரசாரம் மேற்கொள்ள சிறையில் இருந்த டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவாலுக்கு இந்திய சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால ஜாமீன் வழங்கியது.

ஆனால், பாகிஸ்தானில் நான் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படுகிறேன். தேர்தலில் நான் நிற்பதற்கு தடை விதிக்கும் வகையில், தேர்தல் நடந்த பிப்ரவரி 8-ம் தேதிக்கு 5 நாள் முன்பு எனக்கு தண்டனை வழங்கப்படுகிறது. நவாஸ் ஷெரீப் சிறையில் இருந்த போது அவருக்கு வழங்கப்பட்ட வசதிகளுக்கும், தற்போது எனக்கு வழங்கப்படும் வசதிகளையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டும்" என்றார்.


Next Story