தாய்லாந்தின் புதிய பிரதமர் யார்..? ஆளுங்கட்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு


Daughter of former Thai Prime Minister Thaksin Shinawatra will be nominated as new prime minister
x

AFP

தினத்தந்தி 15 Aug 2024 12:17 PM GMT (Updated: 15 Aug 2024 12:26 PM GMT)

பிரதமர் பதவியில் இருந்து ஸ்ரெத்தா தவிசின் நீக்கப்பட்டாலும் புதிய பிரதமரை நாடாளுமன்றம் அங்கீகரிக்கும் வரை அவர் காபந்து பிரதமராக நீடிப்பார்.

பாங்காக்:

தாய்லாந்தில் லஞ்ச வழக்கில் தண்டனை பெற்ற பிச்சித் சைபானை மந்திரியாக நியமித்தது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். மேலும், பிச்சித் சைபானை மந்திரியாக நியமிக்க பரிந்துரை செய்த பிரதமர் ஸ்ரெத்தா தவிசினை பதவிநீக்கம் செய்து அந்நாட்டின் அரசியலமைப்பு கோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டது.

மந்திரிசபை உறுப்பினர்களை தகுதி அடிப்படையில் நியமிக்கும் பொறுப்பு பிரதமருக்கு இருப்பதாகவும், பிரதமர் ஸ்ரெத்தா தவிசின் அதற்கான விதிகளை மீறிவிட்டார் என்றும் கோர்ட்டு தனது உத்தரவில் தெரிவித்தது. ஸ்ரெத்தா தவிசின் பதவிநீக்கம் செய்யப்பட்டாலும், புதிய பிரதமரை நாடாளுமன்றம் அங்கீகரிக்கும் வரை அவர் காபந்து பிரதமராக நீடிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், புதிய பிரதமர் வேட்பாளரை தேர்வு செய்யும் பணியில் ஆளுங்கட்சியான பியூ தாய் கட்சி தீவிர ஆலோசனை மேற்கொண்டது. முன்னாள் நீதித்துறை மந்திரி சாய்காசெம் நிதிசிரி மற்றும் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ராவின் இளைய மகள் பேடோங்டர்ன் ஷினவத்ரா (வயது 37) ஆகியோரின் பெயர்கள் முன்னிலையில் இருந்தன. இவர்களில், பேடோங்டர்ன் ஷினவத்ராவை கட்சி தலைமை தேர்வு செய்து இன்று அறிவித்துள்ளது. பேடோங்டர்ன் ஷினவத்ராவுக்கு பிரதமர் பதவி வழங்க கூட்டணி கட்சிகளும் ஒப்புதல் அளித்தன.

புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்காக நாளை நாடாளுமன்றம் கூடுகிறது. அப்போது, பிரதமர் பதவிக்கான வாக்கெடுப்பு நடத்தப்படும். வாக்கெடுப்பில் பேடோங்டர்ன் வெற்றி பெற்று, நாடாளுமன்றம் அங்கீகரித்தபின் அவர் முறைப்படி பிரதமராக பதவியேற்பார். அத்துடன் அவர் தாய்லாந்தின் இரண்டாவது பெண் பிரதமர் என்ற பெருமையை பெறுவார்.


Next Story