பிலிப்பைன்சில் புயல், நிலச்சரிவு - பலி எண்ணிக்கை 65 ஆக உயர்வு


பிலிப்பைன்சில் புயல், நிலச்சரிவு - பலி எண்ணிக்கை 65 ஆக உயர்வு
x

கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளது.

மணிலா,

பிலிப்பைன்சில் உருவான டிராமி புயல் அங்குள்ள பல மாகாணங்களை புரட்டி போட்டது. இந்த புயல் கரையை கடக்கும்போது மணிக்கு சுமார் 160 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. இதனால் இசபெலா, இபுகாவோ உள்ளிட்ட பல மாகாணங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. எனவே பல நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

இதன் காரணமாக பல வீடுகள் மற்றும் கார்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. கனமழையை தொடர்ந்து படங்காஸ் மாகாணத்தில் பயங்கர நிலச்சரிவும் ஏற்பட்டது. இந்த நிலச்சரிவால் பல வீடுகள் மண்ணில் புதையுண்டன. தகவலறிந்த மீட்பு படையினர் அங்கு விரைந்து சென்று நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் இறங்கினர்.

எனினும் இந்த நிலச்சரிவில் சிக்கி 33 பேர் பலியாகினர். இதன்மூலம் டிராமி புயலால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 65-ஐ தாண்டியது. மேலும் பலர் நிலச்சரிவில் சிக்கி மாயமாகி இருப்பதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. எனவே மாயமானவர்களை தேடும் பணியில் பேரிடர் மீட்பு படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story