நாடு விட்டு நாடு சென்று 24 பெண்களை மயக்கி, பலாத்காரம்... சி.ஐ.ஏ. அதிகாரியின் லீலை
அமெரிக்க அரசில் வேலை செய்கிறார் மற்றும் அரசு குடியிருப்பில் அவர் இருக்கிறார் என தெரியும் என்றும் அதனால், பாதுகாப்பாக உணர்ந்தேன் என பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார்.
வாஷிங்டன்,
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் லா மிசா பகுதியை சேர்ந்தவர் பிரையன் ஜெப்ரி ரேமண்ட் (வயது 48). முன்னாள் சி.ஐ.ஏ. அதிகாரி. இவர் மெக்சிகோ, பெரு உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பணிபுரிந்து உள்ளார். இவர் பணியில் இருந்தபோது, பல்வேறு வெளிநாடுகளில் தங்கியிருக்கிறார். அப்போது, பெண்களை மயக்கி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டு உள்ளார்.
இந்த வழக்கில் அவருக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. இதுபற்றி அமெரிக்காவின் கொலம்பியா மாவட்ட அட்டர்னி மேத்யூ கிரேவ்ஸ் கூறும்போது, பல பெண்களை மயக்க மருந்து கலந்த மதுபானம் கொடுத்து, அவர்களுக்கு தெரியாமல் பாலியல் பலாத்காரம் செய்து இருக்கிறார். அவற்றை புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களாக பதிவு செய்து வைத்திருக்கிறார்.
அரசு பணியாளரான இவர், அரசாங்கம் அளித்த வீட்டிலேயே பெண்களை அழைத்து வந்து மயக்கி, பலாத்காரத்தில் ஈடுபட்டு இருக்கிறார் என்றார். கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த குற்ற சம்பவங்களை ரேமண்ட் ஒப்பு கொண்டிருக்கிறார். எனினும், பின்னர் அவற்றில் இருந்து பின்வாங்கியுள்ள அவர் குற்ற செயலில் ஈடுபடவில்லை எனவும் கூறியுள்ளார்.
இதன்படி, 14 ஆண்டுகளில் இவரிடம் 24 பெண்கள் வரை சிக்கி பாலியல் சுரண்டலுக்கு ஆளாகியுள்ளனர் என மூத்த நீதிமன்ற அதிகாரி நிகோல் அர்ஜெண்டையர் கூறுகிறார்.
இந்த வழக்கானது 2020-ம் ஆண்டு மே 31-ந்தேதி எப்.பி.ஐ. அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டது. அப்போது, மெக்சிகோ சிட்டி பகுதியில் இவருடைய வீட்டு பால்கனியில் நிர்வாண கோலத்தில் பெண் ஒருவர் உதவி கேட்டு கத்தியுள்ளார். அந்த வழியே சென்ற ஒருவர் இதனை பார்த்து இருக்கிறார். இதன்பின்னரே, ரேமண்டுக்கு எதிரான விசாரணை தொடங்கியுள்ளது.
இவரிடம் இருந்து 500-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் கைப்பற்றப்பட்டன. இதன்படி, ரேமண்டின் படுக்கையில் 24 பெண்கள் வரை சுயநினைவின்றி மற்றும் நிர்வாண அல்லது அரை நிர்வாண கோலத்தில் இருக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. அவற்றை கைப்பற்றிய எப்.பி.ஐ. அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், அவருடன் இருந்தபோது, இரவில் நடந்த விவரம் எதுவும் தெரியவில்லை என கூறுகிறார். அமெரிக்க அரசில் வேலை செய்கிறார் மற்றும் அரசு குடியிருப்பில் அவர் இருக்கிறார் என தெரியும் என்றும் அதனால், பாதுகாப்பாக உணர்ந்தேன். ரேமண்ட் கவர்ச்சியாக காணப்பட்டார். அவரை விரும்பினேன் என அந்த பெண் கூறியுள்ளார். டிண்டர் எனப்படும் டேட்டிங் செயலி வழியே பெண்கள் பலரை தொடர்பு கொண்டு அவர்களை தன்னுடைய குடியிருப்புக்கு அழைத்து செல்வது ரேமண்டின் வழக்கம்.
இவர்களில் பலருக்கும், சம்பவத்தின்போது ரேமண்ட் என்ன செய்திருக்கிறார் என்பது தெரிந்திருக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். இவரால் பாதிக்கப்பட்ட விவரம் தெரிந்ததும், சிலர் வேலையை இழந்து விட்டனர். ஒரு சிலருக்கு பயங்கர கனவு வருகிறது. பலரும் தொடர்ந்து கவலையுடன் போராடி வருகின்றனர். ரேமண்டின் செயலால், வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது என உணர்ந்தும், மற்ற நபர்களை நம்ப முடியாத நிலைக்கும் பல பெண்கள் தள்ளப்பட்டு உள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
மெக்சிகோவில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு முதல் 2020-ம் ஆண்டு மே வரை ரேமண்ட் பணிபுரிந்து இருக்கிறார். அப்போது பல பெண்கள் இவரிடம் சிக்கியுள்ளனர். இவர் 2020-ல் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதும் பதவியில் இருந்து விலகியுள்ளார்.