புறப்படும்போது தரையில் உரசியவாறு சென்ற விமானம்-சமூக வலை தளங்களில் வீடியோ வைரல்


புறப்படும்போது தரையில் உரசியவாறு சென்ற விமானம்-சமூக வலை தளங்களில் வீடியோ வைரல்
x
தினத்தந்தி 15 July 2024 1:18 AM GMT (Updated: 15 July 2024 1:32 AM GMT)

இத்தாலியில் விமானம் புறப்படும் போது தரையில் உரசியபடி புகையை கிளப்பி சென்றதால் விமான பயணிகள் பீதி அடைந்தனர்.

ரோம்,

இத்தாலி நாட்டின் லோம்பார்டி மாகாணத்தில் உள்ள பெர்னோ நகரில் சர்வதேச விமான நிலையம் உள்ளது. நேற்று காலை இந்த விமான நிலையத்தில் இருந்து பிரேசிலின் சா பாலோ நகருக்கு பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டது. போயிங் 777 ரக விமானத்தில் நூற்றுக்கணக்கான பயணிகள் இருந்தனர். ஓடுபாதையில் இருந்து புறப்பட்ட விமானம் மேலே எழும்பும் போது விமானத்தின் வால் பகுதி தரையில் உரசியது. சில நூறு மீட்டர் தூரத்துக்கு தரையில் உரசியவாறே சென்றதால் விமானத்தில் இருந்து புகை கிளம்பியது.

இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் விமானம் மேலே எழும்பி பறக்க தொடங்கியது. எனினும் அசம்பாவிதங்களை தவிர்க்கும் விதமாக விமானி விமானத்தை மீண்டும் விமான நிலையத்துக்கு திருப்பி அவசரமாக தரையிக்க முடிவு செய்தார்.

தொடர்ந்து விமான நிலைய கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு தரையிறங்குவதற்கான அனுமதியை பெற்ற விமானி, விமானத்தை அவசரமாக தரையிறக்கினார்.

அதனையடுத்து, பயணிகள் மற்றும் ஊழியர்கள் என விமானத்தில் இருந்த அனைவரும் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். அதன் பின்னர் விமானம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதில் விமானம் பலத்த சேதம் அடைந்தது உறுதி செய்யப்பட்டதை அடுத்து பயணிகள் மாற்று விமானத்தில் பிரேசில் அனுப்பி வைக்கப்பட்டனர். இதனிடையே விமானம் புகையை கிளப்பியபடி ஓடுபாதையில் உரசியவாறே சென்ற வீடியோ சமூக வலைத்தங்களில் வைரலானது.


Next Story