வங்காளதேசத்தில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்.. மத தலைவர்களின் உதவியை நாடும் இடைக்கால அரசு


வங்காளதேசத்தில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்..  மத தலைவர்களின் உதவியை நாடும் இடைக்கால அரசு
x

வங்காளதேச வன்முறை தொடர்பாக வெளிநாட்டு ஊடகங்கள் வெளியிடும் செய்திகளுக்கும் உண்மைக்கும் இடையில் இடைவெளி உள்ளது என இடைக்கால தலைவர் கூறினார்.

டாக்கா:

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள வங்காளதேசத்தில் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் தலைமையிலான அரசாங்கம் ஆகஸ்ட் 5-ம் தேதி கவிழ்ந்தபின், சிறுபான்மை இந்துக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளதன. 50-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 200 தாக்குதல்கள் நடைபெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது. சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்களை இடைக்கால அரசாங்கம் தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.

இந்நிலையில், இடைக்கால அரசாங்கத்தின் தலைவர் முகமது யூனுஸ் தலைமையில் மத தலைவர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. முஸ்லிம், இந்து, கிறிஸ்தவ மற்றும் புத்த மத தலைவர்கள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் பேசிய முகமது யூனுஸ், சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் பற்றிய துல்லியமான தகவல்களை சேகரிப்பதற்கும், குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கும் மத தலைவர்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

நாட்டில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல் விவகாரம் மீண்டும் தலைதூக்கியுள்ளது. வெளிநாட்டு ஊடகங்கள் வெளியிடும் செய்திகளுக்கும் உண்மைக்கும் இடையில் இடைவெளி உள்ளது. எனவே, இதுபற்றி துல்லியமான தகவலை அறிய விரும்புகிறோம்.

நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் சம உரிமைகள் உள்ளன. அரசியலமைப்பில் உள்ளபடி மக்களின் உரிமைகளை உறுதி செய்யவேண்டியது அரசாங்கத்தின் கடமை. நாட்டில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல் சம்பவங்கள் ஏதேனும் நடந்தால், அது குறித்த தகவல்களை உடனடியாக சேகரித்து, குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.

இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்கும் சூழலை உருவாக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நியாயம் கிடைப்பதை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

நான் சொன்ன இந்த கருத்தை வங்காளதேசத்தில் உள்ள பெரும்பாலான மக்கள் ஏற்றுக்கொள்கிறார்கள் என்று நினைக்கிறேன். நமக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் நாம் ஒருவருக்கொருவர் எதிரிகள் அல்ல.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story