தலைவிரித்தாடும் வன்முறை.. வங்காளதேசத்தில் அலுவலகத்தை மூடியது எல்.ஐ.சி.


வங்காளதேசத்தில் எல்ஐசி அலுவலகம் மூடப்பட்டது
x
தினத்தந்தி 5 Aug 2024 11:13 AM GMT (Updated: 5 Aug 2024 12:05 PM GMT)

வங்காளதேசத்தில் நிலைமை கைமீறி சென்ற நிலையில், பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகியதுடன் நாட்டை விட்டு வெளியேறினார்.

டாக்கா:

வங்காளதேசத்தில் அரசுக்கு எதிரான வன்முறைப் போராட்டம் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் நீடிக்கிறது. இந்த வன்முறை மற்றும் மோதல்களில் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

நாட்டில் நிலைமை கைமீறி சென்ற நிலையில், பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகியதுடன் நாட்டை விட்டு வெளியேறினார். அவர் தனது சகோதரியுடன் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் இந்தியாவிற்கு வந்துள்ளார். இந்தியாவில் அவர் தஞ்சம் கோரியிருக்கிறார்.

வங்காளதேசத்தில் சமூக-அரசியல் பதற்றம் அதிகரித்திருப்பதால் அங்குள்ள எல்.ஐ.சி. அலுவலகம் இன்று மூடப்பட்டது. 7-ம் தேதி வரை எல்.ஐ.சி. அலுவலகம் மூடப்பட்டிருக்கும். ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டிருப்பதால, அலுவலகம் மூடப்படுவதாக எல்.ஐ.சி. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போராட்டம் தீவிரமடைந்துள்ளதால் 4,096 கி.மீ. நீளம் கொண்ட இந்தியா-வங்காளதேச எல்லை முழுவதும் இந்திய எல்லைப் பாதுகாப்பு படையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். எல்லை முழுவதும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


Next Story