தேசத்தந்தை படம் இல்லாமல் புதிய ரூபாய் நோட்டுகளை அச்சிடும் வங்காளதேசம்
வங்காளதேசத்தில் அச்சடிக்கப்படும் புதிய ரூபாய் நோட்டுகள் 6 மாதங்களில் புழக்கத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டாக்கா:
வங்காளதேசத்தில் மாணவர்களின் போராட்டம், அதன் தொடர்ச்சியாக நடைபெற்ற வன்முறைகளைத் தொடர்ந்து ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் அரசாங்கம் கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி கவிழ்ந்தது. அதன்பின்னர், பொறுப்பேற்ற இடைக்கால அரசாங்கம், வங்காளதேசத்தின் தந்தை என அழைக்கப்படும் ஷேக் முஜிபுர் ரஹ்மான் (முன்னாள் அதிபர்) புகைப்படங்களை பயன்படுத்துவதை தவிர்த்துவருகிறது. ரூபாய் நோட்டுகளிலும் அவர் படங்கள் பயன்படுத்துவதை நிறுத்த முடிவு செய்தது.
வங்காளதேச ரூபாய் நோட்டுகளில் ஷேக் முஜிபுர் ரஹ்மான் புகைப்படங்களுக்குப்பதில் வழிபாட்டு தலங்கள், வங்காள கலாச்சாரம், ஜூலை புரட்சி தொடர்பான படங்கள் சேர்க்கப்படும் என வங்கி அதிகாரிகள் கூறியிருந்தனர். அதன்படி ஷேக் முஜிபுர் ரஹ்மான் படம் இல்லாமல் புதிய வடிவமைப்புடன் ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் பணி தொடங்கி உள்ளது.
இடைக்கால அரசின் உத்தரவின்பேரில் 20 டாக்கா, 100 டாக்கா, 500 டாக்கா மற்றும் 1000 டாக்கா மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் புதிய டிசைன்களில் அச்சிடப்படுவதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இந்த ரூபாய் நோட்டுகள் 6 மாதங்களில் புழக்கத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.