அமெரிக்காவின் பால்டிமோர் பாலம் விபத்து: நாடு திரும்பிய 8 இந்திய மாலுமிகள்


அமெரிக்காவின் பால்டிமோர் பாலம் விபத்து: நாடு திரும்பிய 8 இந்திய மாலுமிகள்
x

கோப்புப்படம்

தினத்தந்தி 22 Jun 2024 9:46 PM GMT (Updated: 23 Jun 2024 12:41 AM GMT)

கப்பலில் பழுது நீக்கம் பணிகளுக்காக மாலுமிகள் அனைவரும் தொடர்ந்து கப்பலிலேயே தங்க வைக்கப்பட்டனர்.

வாஷிங்டன்,

அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணம் பால்டிமோர் நகரில் படாப்ஸ்கோ ஆற்றின் குறுக்கே 'பிரான்சிஸ் ஸ்காட் கீ' என்ற மிகப்பெரிய பாலம் உள்ளது. 2½ கி.மீ. தூரத்துக்கு 4 வழி பாதையாக அமைந்துள்ள இந்த பாலம் எப்போதும் பரபரப்பாக காணப்படும். கடந்த மார்ச் மாதம் 26-ந் தேதி படாப்ஸ்கோ ஆற்றில் சென்ற 'டாலி' என்ற மிகப்பெரிய சரக்கு கப்பல் 'பிரான்சிஸ் ஸ்காட் கீ' பாலம் மீது மோதியது.

இதில் பாலத்தின் பெரும் பகுதி உடைந்து ஆற்றில் விழுந்தது. கப்பலும் பலத்த சேதம் அடைந்தது. இந்த விபத்தில் பாலத்தில் புனரைமப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த 6 கட்டுமான தொழிலாளர்கள் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதனிடையே விபத்தை ஏற்படுத்திய 'டாலி' சரக்கு கப்பலில் 20 இந்திய மாலுமிகள் இருப்பதாக தகவல் வெளியானது. விபத்தில் அவர்களுக்கு எந்த பாதிப்பு ஏற்படவில்லை என கப்பல் நிறுவனம் தெரிவித்தது. அதே சமயம் விபத்து குறித்து விசாரணை நடத்துவதற்காக மாலுமிகள் அனைவரையும் அமெரிக்காவிலேயே இருக்க போலீசார் உத்தரவிட்டனர்.

இதை தொடர்ந்து கப்பலில் பழுது நீக்கம் பணிகளுக்காக மாலுமிகள் அனைவரும் தொடர்ந்து கப்பலிலேயே தங்க வைக்கப்பட்டனர். அதன்படி கடந்த 3 மாதங்களாக இந்திய மாலுமிகள் விபத்துக்குள்ளான கப்பலில் உள்ளனர்.

இந்த நிலையில் கப்பலில் உள்ள 8 இந்திய மாலுமிகள் அமெரிக்காவை விட்டு வெளியேற நீதிபதிகள் அனுமதி வழங்கினர். இதனையடுத்து அந்த 8 மாலுமிகளும் அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பினர். மற்ற இந்திய மாலுமிகள் 12 பேரும் விசாரணைக்காக தொடர்ந்து அமெரிக்காவிலேயே உள்ளனர்.


Next Story