சிறுவர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை: ஆஸ்திரேலியாவில் வருகிறது புதிய சட்டம்
ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களை பார்க்க தடை விதிக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டு வரப்படும் பிரதமர் அந்தோனி அல்பனீஸ் கூறியுள்ளார்.
மெல்போர்ன்,
இன்றைய தலைமுறையினர் மத்தியில் சமூக வலைதள பயன்பாடு அதிகரித்துள்ளது. பள்ளிக் குழந்தைகள் கூட எப்போதும் சமூக வலைதளங்களில் மூழ்கி கிடப்பதால் அவர்களின் கல்வி பாதிக்கப்படும் சூழல் ஏற்படுகிறது. அதுமட்டும் இன்றி மன ரீதியாகவும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். இதுபோன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் விதமாக ஆஸ்திரேலியாவில் புதிய சட்டம் கொண்டு வர அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களை பார்க்க தடை விதிக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டு வர திட்டமிட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனீஸ் கூறியதாவது:- 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களை பார்க்க தடை விதிக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டு வரப்படும். இந்த சட்டம் 12 மாதங்களுக்கு பிறகு நடைமுறைக்கு வரும். இந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் இதற்கான சட்டம் அறிமுகம் செய்யப்படும். சமூக ஊடகங்கள் குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கின்றன. குழந்தைகள் அதிக நேரத்தை வீணாக செலவு செய்கின்றனர். பெற்றோரின் ஒப்புதலைப் பெற்ற பயனர்களுக்கு விதிவிலக்குகள் இருக்காது" என்று தெரிவித்தார்.