கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடிக்கு அமெரிக்க பாடகி நன்றி


கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடிக்கு அமெரிக்க பாடகி நன்றி
x

கிறிஸ்துமஸ் தொடர்பாக நீங்கள் கூறிய வார்த்தைகள் எனது மனதை நெகிழ்வித்ததாக மேரி மில்பென் கூறியுள்ளார்.

வாஷிங்டன்,

உலக அளவில் கொண்டாடப்படும் மிகப்பெரிய பண்டிகைகளில் ஒன்று, கிறிஸ்துமஸ். டிசம்பர் மாதம் வந்தாலே பல நாடுகளில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை தொடங்கி விடுவார்கள். அந்த வகையில், கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது.

இந்தநிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி இந்திய கத்தோலிக்க தேவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நேற்று பங்கேற்றார். இதைத் தொடர்ந்து ஆப்பிரிக்க-அமெரிக்க பாடகியும், நடிகையுமான மேரி மில்பென் தனது வாழ்த்துகளை பிரதமர் மோடிக்கு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பாடகி மேரி மில்பென் கூறியுள்ளதாவது:

பிரதமர் மோடிக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அன்பின் மிகப்பெரிய பரிசாகவும், அனைவருக்கும் எடுத்துக்காட்டாகவும் இயேசு கிறிஸ்து இருக்கிறார். கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் எனது ரட்சகராகிய கிறிஸ்துவை கவுரவம் செய்ததற்காக பிரதமர் மோடிக்கு நன்றி. கிறிஸ்துமஸ் தொடர்பாக நீங்கள் கூறிய வார்த்தைகள் எனது மனதை நெகிழ்வித்தன. இந்தியாவில் உள்ள என் சகோதர சகோதரிகளுக்கு கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.

இதையடுத்து பாடகி மேரி மில்பென்னுக்கு எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி பதில் அளித்துள்ளார். அவர் அதில் கூறும்போது, கிறிஸ்துவின் போதனைகள் அன்பு, நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவத்தைப் போற்றுகின்றன. இந்த உணர்வை வலுப்படுத்த நாம் அனைவரும் உழைக்க வேண்டியது அவசியம் என்றார்.


Next Story