இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தி 500 நாட்கள் நிறைவு; போரால் ஏற்பட்ட பாதிப்புகள் என்னென்ன?

இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுதக்குழு தாக்குதல் நடத்தி இன்றுடன் 500 நாட்கள் நிறைவடைகிறது.
ஜெருசலேம்,
காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 பேர் உயிரிழந்தனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை காசா முனைக்கு பணய கைதிகளாக ஹமாஸ் கடத்தி சென்றது.
இதையடுத்து ஹமாஸ் மீது போர் அறிவித்த இஸ்ரேல் , காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்த போரில் காசா முனையில் 48 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
அதேவேளை, ஹமாஸ் பிடியில் உள்ள பணய கைதிகளை ஒப்பந்த அடிப்படையிலும், ராணுவ நடவடிக்கை மூலமாகவும் இஸ்ரேல் மீட்டு வருகிறது. ஆனால், ஹமாஸ் ஆயுதக்குழுவால் கொல்லப்பட்ட பணய கைதிகளில் சிலரின் உடல்களையும் இஸ்ரேல் மீட்டுள்ளது. அதேவேளை, ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்களும், லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளும் ஹமாசுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதல்களுக்கும் இஸ்ரேல் தக்க பதிலடி கொடுத்தது. இந்த போர் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த தற்காலிக போர் நிறுத்தத்தின்போது ஹமாஸ் தங்கள் வசம் உள்ள இஸ்ரேலிய பணய கைதிகளை விடுதலை செய்து வருகிறது. இதற்கு ஈடாக இஸ்ரேல் தங்கள் நாட்டு சிறைகளில் உள்ள பாலஸ்தீனிய கைதிகளை விடுதலை செய்து வருகிறது.
இந்நிலையில், இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுதக்குழு 2023 அக்டோபர் 7ம் தேதி தாக்குதல் நடத்தி இன்றுடன் 500 நாட்கள் நிறைவடைகிறது. இந்த போரில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரத்தை காண்போம்.
2023 அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்த ஹமாஸ் ஆயுதக்குழுவினர் 1,139 பேரை கொன்றனர். மேலும், 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு கடத்திச்சென்றனர்.
காசாவில் இன்னும் 73 இஸ்ரேலியர்கள் பணய கைதிகளாக உள்ளனர். இதில், 3 பேர் அக்டோபர் 7ம் தேதிக்கு முன் பணய கைதிகளாக கடத்திச்செல்லப்பட்டவர்கள் ஆவர்.
73 பணய கைதிகளில் 36 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
ஹமாஸ் தாக்குதலை தொடர்ந்து போர் அறிவித்த இஸ்ரேல், காசா முனை மீது சரமாரித்தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் இதுவரை 48 ஆயிரத்து 200 பேர் உயிரிழந்துள்ளனர்.
காசா முனையை நிர்வகித்துவரும் ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைமையில் இயங்கும் சுகாதார அமைச்சகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. போரில் உயிரிழந்த ஹமாஸ் ஆயுதக்குழுவினரின் எண்ணிக்கை குறித்த விவரம் இதுவரை வெளியாகவில்லை.
இஸ்ரேல், ஹமாஸ் போரில் பாலஸ்தீனியர்கள் 1 லட்சத்து 11 ஆயிரத்து 600 பேர் காயமடைந்துள்ளனர்.
ஹமாசுக்கு எதிரான போரில் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் 846 பேர் உயிரிழந்துள்ளனர்.
2023 அக்டோபர் 7ம் தேதி முதல் காசா முனையில் இருந்து இஸ்ரேல் மீது 10 ஆயிரத்திற்கும் அதிகமான ராக்கெட்டுகள் ஏவப்பட்டுள்ளன.
போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்தபிறகு இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்களில் 5 லட்சத்து 86 ஆயிரம் பேர் வடக்கு காசாவுக்கு மீண்டும் வந்துள்ளனர்.
லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்களால் 75 ஆயிரத்து 500 இஸ்ரேலியர்கள் வடக்கு இஸ்ரேல் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்துள்ளனர்.
போரால் காசாவில் 2 லட்சத்து 45 ஆயிரம் வீடுகள் சேதமடைந்துள்ளன அல்லது முழுமையாக தரைமட்டமாக்கப்பட்டுள்ளன.
போரால் காசாவில் 92 சதவீத சாலைகள் சேதமடைந்துள்ளன அல்லது முழுமையாக அழிக்கப்பட்டுள்ளது.
போரால் காசாவின் சுகாதார கட்டமைப்பு 84 சதவீதம் சேதமடைந்துள்ளது அல்லது முழுமையாக அழிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல், ஹமாஸ் இடையே தற்காலிக போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையில் போர் நிறுத்தத்தை நீட்டிக்க தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.