தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை..?


தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை..?
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 26 Oct 2024 6:57 AM IST (Updated: 26 Oct 2024 8:03 AM IST)
t-max-icont-min-icon

கனமழை எச்சரிக்கை காரணமாக குறிப்பிட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

வங்கக்கடலில் உருவான டானா புயல் நேற்று அதிகாலை ஒடிசாவில் தீவிர புயலாக கரையை கடந்தது. இந்த புயல் கரையை கடந்த போது, அரபிக்கடல் பகுதியில் நிலவி வந்த கீழடுக்கு சுழற்சியில் இருந்து மேற்கு காற்றை ஈர்த்தது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் சில இடங்களில் மழைக்கான வாய்ப்பு இருந்தது.

இதன் தொடர்ச்சியாக தெற்கு கேரள கடற்கரையையொட்டிய தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் கீழடுக்கு சுழற்சி காரணமாக மேலும் மழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் மிதமான மழையும், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் கனமழை எச்சரிக்கை காரணமாக குறிப்பிட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி

* கனமழை எச்சரிக்கை காரணமாக நெல்லையில் பள்ளிகளுக்கு இன்று வழக்கமான வார விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சிறப்பு வகுப்புகள் ஏதும் நடத்த வேண்டாம் என பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாக நெல்லை மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

* கனமழை காரணமாக மதுரை கிழக்கு, மதுரை வடக்கு தாலுக்காக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் சங்கீதா உத்தரவிட்டுள்ளார்.

* தேனி மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், சுயநிதி தனியார் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

* கனமழை எச்சரிக்கை காரணமாக தென்காசி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று வழக்கமான வார விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சிறப்பு வகுப்புகள் நடத்த திட்டமிட்டிருந்த பள்ளிகள் அவற்றை நடத்த வேண்டாம் என மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் அறிவுறுத்தி உள்ளார்.


Next Story