சென்னை உள்பட 5 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை


சென்னை உள்பட 5 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
x

கோப்புப்படம்

தினத்தந்தி 15 Oct 2024 10:29 AM GMT (Updated: 15 Oct 2024 2:12 PM GMT)

4 மாவட்டங்களிலும் முக்கிய துறைகள் தவிர பிற அனைத்து அரசு துறைகளுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை

சென்னை,

வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்கும் என்றும் இயல்பை விட அதிகமாக இருக்கும் என்றும் வானிலை மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில் இன்று தமிழகம், புதுச்சேரி, கடலோர ஆந்திரா, தெற்கு கர்நாடகா மற்றும் கேரளா பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே தமிழகத்தில் கன மழை பெய்து வரும் நிலையில் வானிலை மையம் வடகிழக்கு பருவ மழை தொடங்கியதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து தென்மேற்கு பருவமழை முற்றிலும் விலகியதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னை செங்கல்பட்டு திருவள்ளூர் காஞ்சிபுரத்தில் அதிக கன மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், "காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேற்கு வட திசை நோக்கி நகர்வதால் கனமழை நீடிக்கும். இதன்படி அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கன முதல் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னை, புறநகர் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னைக்கு இன்றும் ரெட் அலர்ட் கொடுத்துள்ளோம். சென்னையில் ஒரு சில பகுதிகளில் அதிகனமழைக்கு வாய்ப்புள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 42 இடங்களில் கனமழை பெய்துள்ளது. அடுத்த 4 தினங்களுக்கு தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பரவலாக மழை பெய்யும்" என்று அவர் தெரிவித்திருந்தார்.

அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளநிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு,ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (16-10-2024) விடுமுறை அளிக்கப்படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. 4 மாவட்டங்களிலும் நாளை முக்கிய துறைகள் தவிர பிற அனைத்து அரசு துறைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் மழையால் சேலம் மாவட்டத்தில் நாளை (அக்.16) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து அம்மாவட்ட கலெக்டர் பிருந்தா தேவி உத்தரவிட்டுள்ளார்.


Next Story