சென்னையில் டிச.1ம் தேதி வரை மழை நீடிக்கும் - பிரதீப் ஜான் கணிப்பு
சென்னையில் நாளை முதல் மழை தீவிரமடையும் என்று தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தகவல் தெரிவித்துள்ளார்.
சென்னை,
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, தென் மாவட்டங்கள், தென் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வந்தது. இந்த சூழலில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் கடந்த 22-ந்தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்ததாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.
இந்நிலையில் வங்கக் கடலில் நிலைக்கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் டெல்டா மாவட்டங்களை நோக்கி மெதுவாக நகர்ந்து வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி சென்னையில் இருந்து 830 கி.மீ. தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக நிலை கொண்டுள்ளது. இதன்காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. சாலையில் தேங்கியுள்ள மழை நீரால் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. சென்னை எழும்பூர், பிராட்வே, அடையாறு, திருவான்மியூர், பட்டினப்பாக்கம், மேடவாக்கம், தாம்பரம், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதேபோல செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் வெங்கம்பாக்கம், புதுப்பட்டினம் போன்ற பகுதிகளில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்தநிலையில், சென்னையில் இன்று துவங்கும் மழை, நாளை முதல் தீவிரமடையும் என தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தகவல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
சென்னையில் இன்று முதல் டிச.1-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது. வடகடலோர மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றார். காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக புதுச்சேரி கடல் பகுதிகள் சீற்றத்துடன் காணப்படும். மறு அறிவிப்பு வரும்வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என புதுச்சேரி மீன்வளத்துறை அறிவுறுத்தி உள்ளது.