8 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணிவரை மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணிவரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று அதே பகுதியில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணிநேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து வடதமிழக-தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளுக்கு அருகில் நிலவக்கூடும். அதற்கடுத்த 24 மணிநேரத்தில் வடக்கு திசையில் ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டி நகரக்கூடும்.
இதன் காரணமாக வடகடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்தது.
இதனிடையே, சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் 8 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணிவரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை ஆகிய 8 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணிவரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.