ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி மேலும் வலுப்பெற வாய்ப்பு - வானிலை ஆய்வுமையம்
தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி நிலவி வருகிறது.
சென்னை,
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி இன்று தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வருகிறது. இது வடமேற்கு திசையில் வட தமிழக- தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை நோக்கி நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு திசையில் ஆந்திர கடலோரப் பகுதிகளை ஒட்டி நகரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில், இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வரும் 22-ம் தேதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
இந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி காரணமாக வட கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.