ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் 'பெஞ்சல் புயல்'


ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் பெஞ்சல் புயல்
x

புயல் கரையைக் கடந்தபோது அதிகபட்சமாக மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசியதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று முன்தினம் பிற்பகல் 2.30 மணிக்கு புயலாக வலுப்பெற்றது என அறிவிக்கப்பட்டது. இந்த புயலுக்கு 'பெஞ்சல்' எனவும் பெயர் சூட்டப்பட்டது. இந்த 'பெஞ்சல்' புயல் மேற்கு-வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து நேற்று மாலைக்குள் சென்னை-புதுச்சேரிக்கு இடையே, மாமல்லபுரம்-புதுச்சேரி இடைப்பட்ட பகுதியை மையமாகக் கொண்டு கரையை கடக்கும் எனவும் அறிவிக்கப்பட்டது.

இதன்படி நேற்று அதிகாலை முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காற்றுடன் கனமழைப் பெய்யத் தொடங்கியது. இடைவிடாமல் மழை பெய்து கொண்டே இருந்ததால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். இதற்கிடையே நேற்று மாலை புயல் மாமல்லபுரத்தில் இருந்து 50 கி.மீ. தொலைவில் நகர்ந்து வந்தது.

நேற்று மாலை 5.30 மணியளவில் பயங்கர சூறாவளிக் காற்றுடன் நிலப்பரப்பை எட்டியது. இது மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகில் கரையை கடந்தது. முதலில் முனைப்பகுதியும், அடுத்து மையப்பகுதியான கண் பகுதியும், இறுதியில் வால் பகுதியும் கடந்தது.

இதன்படி இரவு 10.30 மணி முதல் 11.30 மணிக்குள் முழுமையாக கரையக் கடந்த விட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையைக் கடந்தபோது அதிகபட்சமாக மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசியதாகவும், வட மாவட்டங்களில் சூறைக்காற்று வீசியது என்றும் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மேற்கு-தென் மேற்கில் 7 கி.மீ. வேகத்தில் பயணிக்கும் பெஞ்சல் புயல், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

பெஞ்சல் புயல் கரையைக் கடந்தபோது புதுச்சேரியில் 30 செ.மீ. அளவுக்கு அதிகனமழை பதிவானது. மேலும் சென்னை ஆவடியில் 23.7 செ.மீ., விழுப்புரம் மாவட்டம் வானூர் - 23 செ. மீ. திண்டிவனம் - 16 செ.மீ., மேல் மலையனூர் - 12 செ.மீ. விழுப்புரம் மாவட்டம் விக்கிர வாண்டியில் 11 செ.மீ., அளவுக்கு பலத்த மழை பதிவானது.

இதனிடையே செனனை விமானநிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த விமான சேவை மீண்டும் தொடங்கி உள்ளது. அதிகாலை 4 மணி வரை மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தநிலையில் நள்ளிரவு 1 மணிக்கே தொடங்கப்பட்டது. இதன்படி 13 மணி நேரத்திற்குப்பின் விமான சேவை மீண்டும் தொடங்கியது.


Next Story