சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு - பாலச்சந்திரன் வெளியிட்ட தகவல்
நாளை தெற்கு அந்தமான் கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாக உள்ளதாக பாலச்சந்திரன் தெரிவித்தார்.
சென்னை,
வங்க கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் நேற்று பகலில் இருந்து தற்போது வரை விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;
நேற்று மன்னார் வளைகுடா பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று லட்சத்தீவு பகுதிகளில் நிலவி வருகிறது. இது தொடர்ந்து மேற்கு திசையில் நகர்ந்து வலுவிழக்கக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மிகத்தீவிரமாக இருந்தது.
அடுத்த 24 மணி நேரத்திற்கு கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும். நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழ்நாட்டில் அதிகபட்சமாக நெல்லை மாவட்டம் ஊத்து பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 54 செ.மீ. மழை பெய்துள்ளது. வடகிழக்கு பருவமழை அக்டோபர் 1ம் தேதி முதல் இன்று வரை 54 செ.மீ. பெய்துள்ளது. நாளை தெற்கு அந்தமான் கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகிறது. வரும் 17,18ம் தேதிகளில் சென்னையில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது."
இவ்வாறு அவர் கூறினார்.