இரவு 7 மணி வரை 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
தென்மேற்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று (06-12-2024) பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, 7ம் தேதி வாக்கில், தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.
இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, 12-ம் தேதி வாக்கில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இலங்கை - தமிழகம் கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தமிழகத்தின் 4 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.