இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை..?
காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று (07-12-2024) காலை 8.30 மணி அளவில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து சற்று வலுவடைந்து, மேலும் இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து 11-ம் தேதி வாக்கில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இலங்கை தமிழகம் கடற்கரையை நோக்கி நகரக்கூடும். தென்மேற்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தமிழகத்தின் 14 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, பெரம்பலூர், கரூர், திருச்சி, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.