அதிகனமழைக்கு வாய்ப்பு: எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..? - வெளியான முக்கிய தகவல்
தமிழகத்தில் நாளை 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்படுவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
வடகிழக்கு பருவமழை மற்றும் காற்றழுத்த தாழ்வு பகுதி இரண்டும் சென்னையை சூழ்ந்திருப்பதால், சென்னை உட்பட 19 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. இம்மாவட்டங்களில் இன்று தொடங்கி அடுத்த 3 நாட்களுக்கு கன முதல் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அலர்ட் செய்திருக்கிறது.
இதுதொடர்பாக வெளியாகி உள்ள அறிக்கையில், "தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. இதன்படி விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டையில் மிக பலத்த மழை பெய்யக்கூடும்.
மேலும் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது. இதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்.
நாளை ரெட் அலர்ட்
நாளை 3 மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. இதன்படி திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் நாளை மிக கனமழை முதல் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ரெட் அலர்ட் விடுக்கப்படுகிறது.
சென்னை உட்பட 12 மாவட்டங்களில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. இதன்படி சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சை மற்றும் புதுச்சேரியில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருச்சி, புதுக்கோட்டையில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னைக்கு ரெட் அலர்ட்
நாளை மறுநாள் அதாவது அக்.16ம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் கனமுதல் அதி கனமழை பெய்யும் என ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூருக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. தவிர திருப்பத்தூர், வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது.
வரும் 17-ம் தேதி வடதமிழகத்தில் அநேக இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். திருவள்ளூர், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.