தமிழகம் நோக்கி நகர்ந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி : 7 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 7 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவிய, வளிமண்டல கீழடுக்கு சுழற்சியானது, நேற்று மதியம் வலுப்பெற்று, அதே பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது மத்திய மேற்கு வங்கக்கடல், வட தமிழகத்தை நோக்கி நகர்ந்துள்ளது . வட தமிழகம், தெற்கு ஆந்திர கடற்பகுதியில் தற்போது காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நிலவுகிறது.
இதன் காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ,செங்கல்பட்டு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மடிப்பாக்கத்தில் 6.6 செ.மீட்டர் மழைப் பதிவாகி உள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது