வட தமிழகத்தில் வாட்டும் வெயில்; தென் தமிழகத்தில் கொட்டும் மழை: வானிலை ஆய்வு மையம் சொல்வது என்ன?


வட தமிழகத்தில் வாட்டும் வெயில்; தென் தமிழகத்தில் கொட்டும் மழை: வானிலை ஆய்வு மையம் சொல்வது என்ன?
x

தமிழகத்தில் வெப்பநிலை படிப்படியாக அதிகரிக்குமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கடந்த மாதம் வெப்பம் அதிகரித்து வந்த நிலையில், சில நாட்களாக தென் தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழையால் சேதமடைந்தன.

அதே சமயம், வட தமிழகத்தில் வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. மதிய வேளைகளில் வெயிலில் இருந்து தப்பிக்க மக்கள் இளநீர், தர்பூசணி மற்றும் குளிர்பான கடைகளில் அதிக அளவில் குவிந்து வருகின்றனர். வட, தென் தமிழகங்களில் மாறுபட்ட சூழல் காணப்படும் நிலையில், அதிகாலை வேளையில் பனிமூட்டம் நிலவி வருகிறது.

இந்த நிலையில், தமிழகத்தில் வெப்பநிலை படிப்படியாக அதிகரிக்கும் எனவும் தென் தமிழகத்தில் இன்றும் மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும், வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவல் பின்வருமாறு;

அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை:

மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

03-03-2025: தென்தமிழகத்தில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும்.

04-03-2025: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும்.

05-03-2025 முதல் 09-03-2025 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.

அடுத்த ஐந்து தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:

03-03-2025 முதல் 07-03-2025 வரை: தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒரிரு இடங்களில் 2 -3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

சென்னையை பொறுத்தவரை, இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியசை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியசை ஒட்டியும் இருக்கக்கூடும்."

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story